உங்கள் ஆளுமைத் தன்மை பற்றி தெரியணுமா? அப்போ இதை முதலில் படிங்க!

உங்கள் ஆளுமைத் தன்மை பற்றி தெரியணுமா? அப்போ இதை முதலில் படிங்க!

ர்சனாலிட்டி என்பது ஆளுமைத் தன்மையைக் குறிக்கிறது. ஒருவருடைய உணர்வுகள், எண்ணங்கள், நடத்தை இதெல்லாம் சேர்ந்த கலவையே ஆளுமைத் தன்மை எனப்படுகிறது. மற்றவர்களுடன் பழகும்போதும், ஒரு குழுவாக அல்லது தனியாக ஒரு வேலையைச் செய்யும்போதும் வேலைப்பளு நிறைந்த சமயங்களில் எப்படி அதை அணுகுகிறார்கள் என்பதைப் பொறுத்தும் ஒருவரின் ஆளுமைத்தன்மை வெளிப்படுகிறது. ஆளுமைத்தன்மையை டைப் ஏ, டைப் பி, டைப் சி, டைப் டி என நான்கு வகையாகப் பிரித்துள்ளார்கள்.

டைப் ‘ஏ’ வகை நபர்களின் நிறை, குறைகள்:

இவர்கள் லட்சியவாதிகளாக, குழுத் தலைவராக, கடின உழைப்பாளிகளாக, போட்டி மனப்பான்மை நிறைந்தவர்களாக, எப்போதும் சலிக்காமல் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். இவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியும். கூடுதல் பொறுப்புகளை எடுத்து திறம்பட செய்து முடிப்பார்கள். தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். தங்கள் முயற்சியில் எளிதில் வெற்றி அடைவார்கள். மற்றவர்களிடம் தான் என்ன நினைக்கிறோம் என்பதை நேரடியாகப் பேசும் குணம் கொண்டவர்கள். மிக விரைவில் தீர்மானமான முடிவுகளை எடுப்பார்கள். நல்ல தலைமை பண்புள்ள தலைவர்களாக இருப்பார்கள். கடினமான காலகட்டத்திலும் தங்களுடைய வாழ்க்கையை மிக எளிதாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் திறமை உள்ளவராக இருப்பார்கள். மொத்தத்தில் இவர்கள், ‘ரிஸ்க் எடுக்கிறதுன்னா எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி’ ரகத்தினர்.

பிடிவாத குணம், பொறுமையற்ற தன்மை, சட்டென வெறுப்பை வெளிப்படுத்துதல், விரைவில் எரிச்சல்படுதல், முரட்டுத்தனமும், எந்த வேலையும் அவசரமாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் உணர்வுகளை கையாள மிகுந்த சிரமப்படுவார்கள்.

டைப் ‘பி’ வகை நபர்களின் நிறை, குறைகள்:

இவர்கள் அமைதியும், பொறுமையும் நிறைந்தவர்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும், ‘டேக் இட் ஈஸி’ பாலிசிக்காரர்கள். நிலையானத் தன்மை உடையவர்களாகவும், தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்தவர்களாகவும் மற்றவர்களுடன் இணக்கமாக, அட்ஜஸ்ட் செய்துபோகும் மனப்பான்மையும் உடையவர்கள். பிறருடன் சண்டை சச்சரவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

போட்டி மனப்பான்மை குறைவாக இருப்பதால், எந்த ஒரு வேலையையும் மெதுவாக செய்து முடிப்பார்கள். வேலைகளை தள்ளிப்போடுவதில் சமர்த்தர்கள். அதனால் சுயமுன்னேற்றம் குறைவாகவும், குழுவாக வேலை செய்யும்போது தங்களுடைய மெத்தனப்போக்குக் காரணமாக குழுவின் வெற்றியையும் சில சமயம் பாதிக்கும்.

டைப் ‘சி’ நபர்களின் நிறை, குறைகள்:

டைப் சி பர்சனாலிட்டி உடைய நபர்கள் எப்போதும் நுட்பமான சிந்தனையும், விவேகமும் கொண்டவர்கள். எந்தக் காரியத்தையும் காரண, காரியத்தோடுதான் செய்வார்கள். அதே சமயம் உணர்வுகளைப் புறந்தள்ளி, ஆராய்ச்சிபூர்வமான உண்மைகளை மட்டும் நம்பிக்கொண்டு எதையும் லாஜிக்கோடு அணுகுவர். இவர்களுக்கு தன் முன்னேற்றம் ஒன்றே குறி. அதற்காக தனது சொந்த எதிர்பார்ப்புகளைக் கூட விட்டுத் தருவார்கள். தன்னையும் மற்றவர்களையும் அடக்கியாளத் தெரிந்தவர்கள். ஒரு காரியத்தில் இறங்கும் முன் அதைப்பற்றி மிகத்தெளிவாக சிந்தித்த பின்பே இறங்குவர்.

தனியாக செயல்பட விரும்பும் அதே நேரம், பிறருக்கு ஆதரவு அளிக்கத் தயங்கமாட்டார்கள். பல முறை யோசித்து மிக ஜாக்கிரதையாக எந்த ஒரு முடிவையும் எடுப்பார்கள். மிகவும் சிக்கலான, சவாலான சூழ்நிலைகளை துணிச்சலாகக் கையாள்வர். எந்த ஒரு வேலையிலும் மிக நேர்த்தியாக பொருந்தும் குணம் கொண்டவர்கள். வழக்கறிஞர்கள், அக்கவுண்டன்ட்டுகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், காவல்துறை அதிகாரிகள் பலர் டைப் சி வகையைச் சேர்ந்தவர்கள்.

உணர்வுகளுக்கு மதிப்பு தராத காரணத்தால், பிறர் மீது கருணையும், பரிதாபமும் பட வேண்டிய சூழ்நிலையில் கூட, இரக்கமின்றி நடந்து கொள்வது இவர்களின் குணமாக இருக்கும். அதனால் அடிக்கடி விரக்தி மனப்பான்மையும், பிறரால் விரும்பப்படாத நிலையும் இருக்கும்.

டைப் ‘டி’வகை நபர்களின் நிறை, குறைகள்:

அமைதியான, நேர்மையான, எளிதில் அணுகக்கூடிய தன்மையுடையவர்கள். அன்பாகவும், பிரியத்துடனும் பழகும் குணமுள்ளவர்கள். பிறர் பேசுவதை பொறுமையாக காது கொடுத்துக் கேட்பர். இவர்களை பிறர் எளிதில் பயன்படுத்திக்கொள்வர். ஒரு குழுவாக வேலை செய்வதை விரும்புவர்.

இவர்களிடம் நேர்மறை குணங்களை விட, எதிர்மறை சிந்தனைகள் மிகுந்திருக்கும். கூச்ச சுபாவம், தன் மீதே திருப்தியும் நம்பிக்கையும் இல்லாமை, மன அழுத்தம், பதற்றம், கோபம், எரிச்சல், வெறுப்பு போன்றவற்றின் கலவையாக இருப்பார்கள். பிறர் தன்னை ஒதுக்கித் தள்ளுவார்களோ என்ற பயத்தில் தம் எதிர்மறை உணர்வுகளை வெளிக்காட்டத் தயங்குவர். பிறருடன் கலந்து பழகுவதை இதனால் தவிர்ப்பர்.

தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று கவனிப்பதை விட, தன் உள்மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் ஓடுகின்றன என ஆராய்வதில் கவனம் கொள்வர். ஒரே மாதிரியான வழக்கமான வேலைகளைச் செய்வதையே விரும்புவர். மாற்றங்களை எதிர்கொள்ளத் தயங்குவர். அவ்வளவு எளிதில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்போதும் பிறரிடம் மரியாதை, ஒப்புதல், பாராட்டை எதிர்பார்ப்பர். அதற்காக எவ்வளவு கடினமாக உழைக்கவும் தயங்கமாட்டார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com