
வேலை, வேலை என மெஷின் போலும் இயங்கும் பெண்களுக்கு தலைவலி என்பது கூடவே இருக்கும். பல பெண்கள் தைலத்துடன் வாழ்வதை நாம் பார்த்திருப்போம். அதுவும் ஒரு சில பெண்கள் குறிப்பாக ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான காரணம் என்ன, அதை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..!
சமீப காலமாகவே மைக்ரேன் என்ற வார்த்தை இளம்பெண்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது ஆரம்பக்கட்டம் முதல், தீவிரமானது வரை பல நிலைகளுக்கும் போகக்கூடியதாகும். குறிப்பாக மாதவிடாய்க்கு முன்பு அல்லது மாதவிடாயின் போது மெனோபாஸ் மற்றும் கர்ப்ப காலத்தில் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். வழக்கமான தலைவலியோடு ஒப்பிடும்பொழுது ஒற்றைத் தலைவலி என்பது மிகவும் மோசமான வலியாக கருதப்படுகிறது. தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் அதிகப்படியான வலி மற்றும் அதனுடன் சேர்ந்து மங்கலான பார்வை, குமட்டல், வாந்தி மற்றும் வெளிச்சத்திற்கு கண் கூச்சம் போன்ற அறிகுறிகள் தோன்றுகிறது. வலியானது ஒரு சில மணி நேரங்கள் முதல் நாட்கள் வரை கூட நீடிக்கலாம். இதனால் அன்றாட வேலைகளை செய்வது கடினமாகிறது.
பெண்களிடையே ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஹார்மோன் சமநிலையின்மை என்று சொல்லப்படுகிறது. இந்த நரம்பு சார்ந்த கோளாறு என்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவுகளில் உள்ள ஏற்ற இறக்கங்களின் காரணமாகவும் தூண்டப்படலாம்.
அதிலும் குறிப்பாக மாதவிடாய்ககு முன்பு அல்லது மாதவிடாயின் போது, மெனோபாஸ் மற்றும் கர்ப்ப காலத்தில் இது அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு சில மருந்துகள், மதுபானம் மற்றும் அளவுக்கு அதிகமான காஃபைன் எடுத்துக் கொள்வதாலும் ஒற்றைத் தலைவலி வரலாம்.
மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் கடினமான உடற்பயிற்சி ஆகியவற்றாலும் இது ஏற்படலாம். ஒரு சில வாசனைகள் அல்லது பர்ஃப்யூம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் ஒற்றை தலைவலி ஏற்பட காரணமாக அமைகின்றது. இப்படிப்பட்ட ஒற்றை தலைவலியை சமாளிப்பதற்கு உதவும் சில குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அமைதியான சூழலில் ஓய்வு:
வலி எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் சரி நீங்கள் சரியான முறையில் ஓய்வு எடுத்துக் கொண்டால் உங்களுடைய ஒற்றைத் தலைவலி பறந்து போய்விடும். இருட்டான அமைதியான அறையில் படுத்து உறங்குங்கள். வாந்தி வரும் பட்சத்தில் போதுமான அளவு தண்ணீர் பருக மறக்காதீர்கள். தசைகளில் உள்ள பதற்றத்தை போக்குவதற்கு ஒத்தடங்கள் கொடுக்கலாம். இதற்கு நீங்கள் சூடான அல்லது ஐஸ் பேக் ஒத்தடத்தை பயன்படுத்துங்கள்.
நன்றாக தூங்கவும்:
ஒற்றை தலைவலி என்பது இரவு நேரத்தில் உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காததால் தூண்டப்பட வாய்ப்புள்ளது. எனவே பகல் நேரத்தில் தூங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் குறைந்தப்பட்சம் 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள். இரவு தூங்குவதற்கு முன்பு அமைதியான இசை கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது போன்றவை உங்களுக்கு உதவும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்:
ஒற்றைத் தலைவலி மற்றும் மன அழுத்தம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நீங்கள் ஆற்றல் இல்லாமல் உணரும் போதெல்லாம் விறுவிறுப்பான ஒரு நடைபயிற்சியில் ஈடுபடுங்கள். மூச்சு பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யுங்கள்.
தினமும் வொர்க்-அவுட் செய்வது:
உடற்பயிற்சியின் போது உடலானது ஒரு சில கெமிக்கல்களை வெளியிடுகிறது. இது மூளை செல்களுக்கு வலி சிக்னல்கள் போய்சேராமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் இதனால் பதட்டம் மற்றும் மனசோர்வு குறைந்து, ஒற்றை தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
ஆரோக்கியமான உணவு:
ஒற்றைத் தலைவலி நோயாளிகள் ஒருபோதும் உணவுகளை தவிர்க்கக்கூடாது. வெறும் வயிற்றில் இருப்பது வலியை தூண்டலாம். நாள்பட்ட சீஸ், சாக்லேட் மற்றும் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.