பொதுவாக குளிர்காலத்தில் உடலில் செரிமானம் குறைவாகவே நடைபெறுகிறது. உடல் இயக்கமும் குறைவாக இருப்பதால், ஜீரண சக்தி மந்தமாகி, செரிமானம் நடைபெற தாமதமாகிறது. வழக்கமான அரிசி உணவை விட திணை அரிசி மிகுந்த பயன் தரும். இது செரிமானத்தை சீராக்குவதுடன், உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் அளிக்கிறது.
திணையில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமான உறுப்புகளை பலப்படுத்தி, சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாவதற்கு உதவி செய்கிறது. மேலும் கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளை பலப்படுத்தி பாதுகாக்கிறது.
திணையில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தையமின், அதிக அளவிலான அமினோ அமிலங்களும் உள்ளன. இவை நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறவும், எலும்புகள் பலம் பெறவும், தசைகள் உறுதி பெறவும் உதவுகின்றன. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய்க் கோளாறுகள், கருப்பை சம்பந்தமான அனைத்து பிரச்னைகளையும் சரி செய்கிறது.
இதில் உள்ள அமினோ அமிலங்கள் மூளையின் செயல்பாடுகளை சீராக இயங்குவதற்கும், மூளையில் புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும் உதவி செய்கிறது. குழந்தைகளுக்கு திணை அரிசியை உணவாகக் கொடுத்து வர அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
திணையில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது குடலில் ஒரு பிசுபிசுப்பான பொருளை உருவாக்குவதால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. திணையை தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் எடை குறைகிறது. மேலும், இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
இது உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து உடல் வறட்சியை நீக்கி, நீரேற்றத்துடன் வைக்கிறது. சிறுநீரகங்களில் கற்கள் அடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்றவை வராமல் தடுக்கிறது. சிறுநீரைப் பெருக்கி உடலில் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுகிறது.
திணை அரிசியில் சாதம், பொங்கல், தோசை, இட்லி, தினைமாவு உருண்டை போன்றவற்றை செய்து உண்ணப் பயன்படுத்தலாம்.