மழைக்கால நோய்களும், சிகிச்சை முறைகளும்!

மழைக்கால நோய்களும், சிகிச்சை முறைகளும்!

வாட்டியெடுத்த வெயிலின் தாக்கம் குறைந்து, மாலை நேரங்களில் மழை பெய்து உடலையும் மனதையும் குளிர்வித்தாலும், கையோடு சில நோய்களையும் இந்த மழை கொண்டு வந்து விடுகிறது. மழைக் காலத்தில் ஏற்படும் சில பொதுவான நோய்களையும், அவற்றின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றியும் இந்தப் பதிவில் காண்போம்.

1. சளி மற்றும் இருமல்: மழைக்காலத்தில், வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாறுதல் காரணமாக சளி, இருமல் மற்றும் வைரஸ் தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கும். மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தும்மல், உடல் வலி, தொண்டை வலி, காய்ச்சல், சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும்.

2. வைரஸ் காய்ச்சல்: மழைக்காலங்களில் சாதாரணமாக மனிதர்களுக்கு வரக்கூடிய ஒன்று. இது உடல் வலி, தலைவலி, எரிச்சல், சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். இதனுடன் சளியோ அல்லது இருமலோ சேர்ந்தும் இருக்கும்.

3. டெங்கு காய்ச்சல்: கொசுக்களால் ஏற்படும் இக்காய்ச்சல் வந்தால் உடல் வலி, தலைவலி, தசை, எலும்பு அல்லது மூட்டு வலி, குமட்டல், வாந்தி கண்களுக்குப் பின்னால் வலி, வீங்கிய சுரப்பிகள், சொறி மற்றும் தடிப்புகள் போன்றவை உண்டாகும். தொடர்ச்சியான வாந்தி, ஈறுகள் அல்லது மூக்கில் இருந்து இரத்தப்போக்கு, சிறுநீரில் இரத்தம் போன்றவை கடுமையான டெங்கு காய்ச்சலின் எச்சரிக்கை அறிகுறிகள். இந்த நோயாளிகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். இக்காய்ச்சல் வருவதற்கான முக்கியமான காரணம் டைகர் கொசுக்கள்தான். இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு கொசு விரட்டிகள், கொசுவலைகளை அவசியம் பயன்படுத்த வேண்டும்.

4. மலேரியா: மழைக்காலத்தில் ஏற்படும் மற்றொரு முக்கியமான காய்ச்சல். ‘பிளாஸ்மோடியம்’ எனும் ஒட்டுண்ணியால் ஏற்படும் காய்ச்சல் இது. பெண் அனாபிலிஸ் கொசுக்களால் மலேரியா பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும். காய்ச்சல், சளி, தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தசை அல்லது மூட்டு வலி, சோர்வு, விரைவான சுவாசம், இருமல் போன்றவை மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

5. டைபாய்டு: ‘எஸ்.டைஃபி’ என்ற பாக்டீரியா உணவு மற்றும் தண்ணீரில் கலந்து டைபாய்டு காய்ச்சலை உண்டாக்குகிறது. சுகாதாரமற்ற சுற்றுப்புறம், அசுத்தமான உணவுப்பொருட்கள், நீர் மூலம் இவை பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவை டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகள்.

6. ஹெபடைடிஸ் ஏ: இது ஈக்களால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். தலைவலி, மூட்டு வலிகள் மற்றும் வாந்தி போன்றவை இதன் அறிகுறிகள். ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி போட்டவர்களை இந்தத் தொற்று பாதிக்காது. இந்நோய் கண்டவர்கள் அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை கண்டிப்பாகத் தவிர்ப்பது அவசியம். உடலுக்கு போதுமான ஓய்வு மற்றும் அதிக கலோரி உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவும். தெருவோர தள்ளுவண்டிகளில் விற்கும் சுகாதாரமற்ற உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்.

7. லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல்: மழைக்காலங்களில் அசுத்தமான தண்ணீரில், 'லெப்டோஸ்பைரா' என்ற நுண்ணுயிரி இருக்கும். அந்தத் தண்ணீரைக் குடிக்கும் எலியின் உடலை அந்த நுண்ணுயிர் தாக்கும். எலியின் சிறுநீர் தண்ணீரில் கலந்து அதை மனிதர்கள் உபயோகிக்கும்போது எலிக்காய்ச்சல் வருகிறது. உடலில் ஏதாவது வெட்டுக்காயம் இருந்தால் அதன் மூலமும், வீதியில் தேங்கியிருக்கும் நீரில் வெறுங்காலுடன் நடந்தாலும் லெப்டோஸ்பைரா உடலில் புகுந்து எலிக்காய்ச்சல் வர வாய்ப்புண்டு. செருப்பின்றி வெளியே நடக்கக்கூடாது.

மழைக்கால நோய்களில் இருந்து தற்காப்பு நடவடிக்கைகள்:

1. மழைக்காலத்தில் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோட் எடுத்துச் செல்லவும். மழையில் நனைந்து விட்டால் வீட்டுக்கு வந்ததும் ஈர உடைகளை மாற்றி உலர்ந்த ஆடைகளை அணியவும். மறக்காமல் கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். தலையை நன்றாகக் காய வைக்கவும். சூடாக ஏதேனும் பானம் பருகவும்.

2. வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசுக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கொசு விரட்டிகள், கொசுவலையை பயன்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு கொசு கடிக்காமல் இருப்பதற்கான ஆயின்மென்ட் தடவி விடலாம். (அவற்றை வாயில் வைக்காமல் பார்த்துக் கொள்ளவும்.)

3. சுத்தமான, போதுமான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். காய்ச்சி ஆற வைத்த குடிநீர் நல்லது. சத்தான சூப்புகள் செய்து குடிக்கலாம். ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள் வேண்டாம்.

4. எப்போதும் புதிதாக சமைத்து உண்பது நல்லது. பிரிட்ஜில் இரண்டு மூன்று நாட்கள் வைத்த பழைய உணவுகளை உண்ணக்கூடாது. வெளியே கடைகளில் வாங்கி உண்ணுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

5. கீரைகள், காய்களை உப்பு மஞ்சள் கலந்த நீரில் நன்கு கழுவிய பின்பே சமைக்க வேண்டும். இறைச்சி வகைகளை வாங்கி வந்தவுடன் சமைத்து விடுவது நல்லது. பிரிட்ஜில் ஸ்டோர் செய்ய வேண்டாம்.

6. இரவில் பாலுடன் மிளகுத்தூள், மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம். பச்சை மிளகாயை தவிர்த்துவிட்டு, மிளகுப் பொடி சேர்த்து சமைக்க வேண்டும்.

7. காய்ச்சல், சளி, இருமல் எதுவானாலும் கை வைத்தியத்துக்கு சரியாகவில்லை எனில், தயங்காமல் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com