

முருங்கை மரத்தை எங்கும் காணலாம். இந்த மரத்துக்கு விதை இருந்தாலும், விதை ஊன்றாமலேயே மரத்தின் கிளையை வெட்டி பூமியில் ஊன்றினால் வேர்ப்பிடித்து மரமாகி, பூவாகி ,பிஞ்சாகி, காய்கள் கொத்து கொத்தாக காய்த்து விடும். அந்த மரத்தின் பயன்பாடுகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
முருங்கை மரத்தில் (Moringa health benefits) பயன் இல்லாதவை ஒன்று கூட இல்லை. முருங்கை இலை, பூ , காய் வேர்ப்பட்டை, பிசின் அத்தனையும் மருத்துவத்தில் பயன்படும் பொருள்களே. இந்த மரம் அனேகமாக எந்த வியாதியையும் தீர்க்கும் சஞ்சீவி என்று கூறலாம்.
இலை:
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.
காய்:
கடுமையான ரத்த சீத பேதி, வயிற்றுப்புண், தலைவலி , வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கு எல்லாம் முருங்கைக்காய் கை கண்ட மருந்து. முருங்கைக்காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடலாம் அல்லது நெய்யில் பொரித்து சாப்பிடலாம். இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு டம்ளர் எருமை மோர் சாப்பிடுவது ஜீரணத்துக்கு உதவி செய்கிறது.
முருங்கைக்காய் சாம்பார் ருசியோடு இருப்பது மட்டுமல்லாமல் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண்ணோய் இவற்றுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாரத்துக்கு இரண்டு ஒரு முறை முருங்கைக்காயை உணவாக உபயோகிப்பதால் ரத்தமும், சிறுநீரும் சுத்தமடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு அளிக்கின்றன.
முருங்கைக்காய் சூப் செய்து சாப்பிட்டால் காய்ச்சலையும் மூட்டு வலியையும் போக்கி விடுகிறது.
முருங்கைப் பூ:
முருங்கைப் பூவை ஒரு பிடி எடுத்து கால் படி பாலில் வேக வைத்து சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர உயிர் சக்தி பெருகும்.
பிசின்:
முருங்கை பிசினுக்கும் பூவின் குணங்கள் இருப்பதால் இதனை நெய் விட்டு பொரித்து பவுடர் செய்து பாலில் போட்டு சாப்பிட்டு வரலாம். மேலும், இது லேகியங்கள் செய்வதற்கும் டானிக் செய்வதற்கும் பயன்படுகிறது.
பச்சைக் கோந்தை காதில் ஒரு சொட்டு ஊற்றினால் காது வலி நின்று விடும். இந்த மரத்தின் வேரும் பிசினும் சம்பந்தப்பட்ட டானிக்கை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப் போகும்.
இப்படி முருங்கை மரத்தில் மனிதர்களுக்கு தேவையான ஜீவ சத்துப் பொருட்கள் பூரணமாக இருப்பதால் இதனை ஓர் சர்வ சஞ்சீவி என்று கூறுகின்றனர்.