

2017 ஆம் ஆண்டு, தீபம் இதழில், 'முத்திரை பயிற்சி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
முத்திரை பழகுவதினால் என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று கேள்வியோடு நின்றுவிட்டால் விடை, பூஜ்யமாகத்தான் இருக்கும். விரல்களை விரல்களோடு இணைப்பதினால் என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று நினைத்தால், நினைப்பவர்கள் ஏமாறப்போவது உறுதி.
எந்த ஒரு செயலையும் தொடர்ந்து முயற்சி செய்யும்போது மட்டுமே அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும். அதைப்போலவே முத்திரைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடும்போது மட்டுமே அதன் பலனையும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் நாம் உணர முடியும்.
உடல் ஆரோக்கியத்தில் நாடிகள் எனும் நரம்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நம் உடலில் மொத்தம் 72,000 நாடிகள் உள்ளன. அதில் 10 நாடிகள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக, வாதம், பித்தம், சிலேத்துமம் எனும் நாடிகள் பிரதான நாடிகளாகும்.
இம்மூன்று நாடிகளைப் பற்றி வாழ்வியல் சித்தர், மருத்துவஞானி திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
'மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.'
(திருக்குறள் : 941)
அதாவது, வாதம், பித்தம், சிலேத்துமம் எனும் மூன்று நாடிகளும் நம் உடலில் இருக்க வேண்டிய அளவைவிட கூடினாலும், குறைந்தாலும் நமது உடல் பல்வேறு நோய்களை உண்டுபண்ணும் என்பதே வள்ளுவரின் வாக்காகும். வாத, பித்த, சிலேத்தும நாடிகள் தமது இயக்க அளவீடுகளில் சரியாக இருக்கும்போது நோய்த் தாக்குதல் ஏற்படுவதில்லை. நோயிலிருந்து விடுபடவும், நோய் தாக்குதலை தடுக்கவும் மிக முக்கிய உபகரணம் முத்திரை பயிற்சியாகும்.
ஒரு விரலை மற்ற விரலின் நுனியோடு இணைக்கும்போது, உடலானது உஷ்ண சமன்பாடு அடைகிறது. அதன் மூலம் ஜீரண சக்தி மேம்படுகிறது. உடலியக்கம் சமநிலைக்கு வருகிறது. நரம்பு மண்டலம் மட்டுமில்லாமல், நம் உடலில் நாளமில்லாச் சுரப்பிகள் எனப்படும் சக்கரங்கள் எவ்வளவு பிரதானமானது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
குபேர முத்திரை:
பத்மாசனம். சுகாசனம். வஜ்ராசனம், அர்த்த பத்மாசனம் என்று ஏதேனும் ஒரு தியான ஆசனத்தில் தரைவிரிப்பில் கிழக்கு நோக்கி நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ளவும். கைகள் இரண்டும் முழங்கால்களின் மீது இருக்கட்டும். கட்டை விரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் மூன்று விரல்களின் நுனிப்பகுதி தொட்டுக் கொண்டு இருக்கட்டும். சுண்டு விரல். மோதிர விரல் இரண்டும் உள்ளங்கையைத் தொட்டவாறு இருக்கட்டும். கைகள் மேல்நோக்கி இருக்கட்டும். ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம் வரை இம் முத்திரையில் இருக்கலாம்.
பயன்கள் :
மலச்சிக்கல் வராது.
மனம் மிகுந்த அமைதியாக இருக்கும்.
தலைவலி குணமாகும்.
உடனடியாக தூக்கத்தை வரவழைக்கும்.
உள் உறுப்புகள் இயக்கம் சீராகும்.
நினைவாற்றல் பெருகும்.
தீய பழக்கங்களில் இருந்து மீள முடியும்.
மனமும், உடலும் ஆரோக்கியமாக விளங்க உதவும்.
மூலாதாரச் சக்கரத்தில் இருந்து தண்டுவடம் வழியாக மூளை வரை நரம்பு மண்டலம் தூண்டப் படுகிறது.
(தொடரும்)
(தீபம் இதழ்: பிப்ரவரி 05, 2018)