முத்திரை பயிற்சி - 6: நீரிழிவு நீங்க 'ஸர்வ வசங்கரி முத்திரை'!

யோகி சிவானந்தம்
Mudra Practise - 6
Mudra Practise - 6
Published on

2017 ஆம் ஆண்டு, தீபம் இதழில், 'முத்திரை பயிற்சி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

இந்தத் திருக்குறளின் பொருள்: நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கை உணர்வுடனும் செய்யவேண்டும். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அதில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து அதன்பிறகு நல்ல விஷயத்தில் செயல்படவேண்டும். அவ்வாறு இல்லாமல் கவனக்குறைவாகச் செயல்படும்போது அதன் விளைவுகளும், அதனால் ஏற்படும் பலன்களும் மிக மோசமாக இருக்கும். அப்படிப்பட்டவன் வாழ்க்கை எரிகின்ற நெருப்பின்முன் நின்ற (வைக்கப்பட்ட) வைக்கோல்போர்போல எரிந்து அழிந்துவிடும்.

அதுபோல, நோயில் சிக்கிக்கொள்ளாமலும், நோய் வராமல் தடுத்தலுமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாகும். நமது உடல் உறுப்புகளில் நாம் செய்யும் (உடல், மனம், உணவு) அட்டூழியங்கள் அனைத்தையும் தாங்கும் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகங்கள் ஆகும். ஆனால், சிறுநீரகத்தில் ஒரு பிரச்னை வந்து, அது திருப்பி அடிக்க ஆரம்பித்தால் நாம் தண்ணீர்கூட அருந்த முடியாத நிலை ஏற்படும்.

சாத்வீக உணவில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தி மட்டுமே சிறுநீரகத்துக்கு உண்டு. துரித உணவு மற்றும் அதிகப்படியான பொறித்த மாமிச உணவுகளில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகங்கள் சிரமப்படும். ஒரு ஜோடி சிறுநீரகங்கள் மனித உடலில் இருக்கிறது. ஒவ்வொன்றின் எடையும் சுமார் 100 கிராம் ஆகும். இதில் முக்கியமாக 'நெஃப்ரான்' என்று சொல்லப்படும் மிக நுட்பமாக நுண்குழல்கள் எனும் வடிகட்டிகள் காணப்படுகின்றன.

இதனுள்ளே மேலும் பல உட்பிரிவுகள் உள்ளன. மனித உடலில் சிறுநீரகங்களின் செயல்பாடு மிக முக்கியமானது. கழிவுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரித்து நுரையீரலுக்கு அனுப்பும் பணியைச் செய்கிறது. சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஸர்வ வசங்கரி முத்திரையை பற்றிப் பார்ப்போம். சிறுநீரகங்கள் அமைந்துள்ள இடம் மணிப்பூரகச் சக்கரம் இருக்கும் வயிற்றுப் பகுதியாகும் மணிப்பூரகச் சக்கரத்தை பற்றி பின்வரும் சுலோகம் கூறுவதைப் பார்ப்போம்.

Sarva Vasankari Mudra
Sarva Vasankari Mudra

‘வாமபார்ச்வரூப மணிபூராத்மளே

ஸர்வவசங்கரீ

முத்ரா சக்த்யை நம.’

பொருள்: இடது பக்க உருவமாக தொப்புள் பகுதியில் எல்லாவற்றையும் ஈர்க்கக்கூடிய 'மணிப் பூரகம்' சக்கரமாக விளங்கும் 'ஸர்வ வசங்கரீ' எனும் முத்திரை சக்தியை வணங்குகிறேன்.

இப்போது, சிறுநீரகம் நன்கு செயல்பட உதவும் இந்த ஸர்வ வசங்கரி முத்திரை பழகுவோம்.

ஸர்வ வசங்கரீ முத்திரை:

பத்மாசனம், அர்த்தபத்மாசனம், சுகாசனம் ஏதேனும் ஒரு ஆசனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்துகொள்ளவும். மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் இரண்டும் கட்டை விரலின் அடிப்பகுதிக்கு அருகில் உள்ளங்கையைத் தொட்டவாறு இருக்கட்டும்.

கட்டை விரலானது மோதிர விரல் மற்றும் சுண்டு விரலின் மேல் பகுதியை லேசாக அழுத்தியவாறு இருக்கட்டும் நடுவிரலும், ஆள் காட்டி விரலும் நீட்டிய நிலையில் இருக்கட்டும்.

இதனை எளிமையாக சொல்ல வேண்டும் எனில், 'சுடுவதை' குறிப்பதுபோல் இருக்கும். முதலில் இரண்டு நிமிடம் இந்த நிலையில் இருந்து பழகவும். படிப்படியாக ஐந்து நிமிடம் இம் முத்திரையில் இருக்கவும்.

பயன்கள் :

  • ரத்தத்தை சுத்திகரித்து, இரத்தத்தில் கழிவுகள் சேராமல் பார்த்துக்கொள்ளும்.

  • சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படுத்தப்படும்.

  • இதனோடு இணைந்து இதயம் மற்றும் நுரையீரல்களின் செயல் ஒருங்கிணைந்து இருக்கும்.

  • தலைவலி தடுக்கப்படுகிறது.

  • நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் கட்டுக்குள் வந்து நன்மை பயக்கும்.

  • உடல் சோர்வு தடுக்கப்படுகிறது.

  • ரத்தத்தில் உப்புகளின் செறிவை ஒழுங்குப்படுத்தும்.

  • மொத்தத்தில் 'சிறுநீரக நண்பன்' இந்த முத்திரை?

(தொடரும்)

(தீபம் இதழ்: பிப்ரவரி 20, 2018)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com