Healthy nails
Healthy nailshttps://tamil.boldsky.com

நகங்கள் உணர்த்தும் நோயின் அறிகுறிகளும் தீர்வுகளும்!

கால் நகங்களில் கருப்பு கோடு, நகங்கள் அடிக்கடி உடைந்து போவது போன்றவை உடலில் உள்ள நோயின் அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

முகத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் மற்ற உறுப்புகளுக்கு அவ்வளவாகக் கொடுப்பதில்லை. சிலருக்கு கால் நகங்கள் உடைந்தும், கருப்பாகவும் பார்ப்பதற்கு ஆரோக்கியமான நகங்களாகத் தோற்றமளிக்காது. சரும பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே முக்கியத்துவத்தை நம் கை, கால் நகங்களுக்கும் கொடுக்கத் தவறக் கூடாது.

பொதுவாக, ஆரோக்கியமான நகங்கள் மென்மையாகவும் லேசாக சிவந்தும் காணப்படும். சிலருக்கு நகங்களில் நேராகக் கோடு விழுந்திருக்கும். கால் நகங்களில் கருப்பு கோடு, நகங்கள் அடிக்கடி உடைந்து போவது, நகங்கள் பார்ப்பதற்கு மங்கலாக இருப்பது, நகங்களில் ஆங்காங்கே வெள்ளைத் திட்டுக்கள் போன்று தெரிவது இவை எல்லாம் ஆரோக்கியமற்ற உடலை நமக்கு எடுத்துக்காட்டும் அறிகுறிகளாகும்.

நகங்கள் உடைவதற்குக் காரணம் ஈரத்தன்மை இல்லாமல் வறட்சியாக இருப்பதேயாகும். இதற்கு தீர்வாக தேங்காய் எண்ணெயை சிறிதளவு எடுத்து சுட வைத்து வெதுவெதுப்பாக நகங்களில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வரலாம். தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் உள்ளன. எனவே, தினமும் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வர, நகங்கள் வலுவானதாக இருக்கும்.

நீண்ட நாட்களாக தைராய்டு பிரச்னைக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கும் அடிக்கடி நகமுடைதல் பிரச்னை ஏற்படும். சிலருக்கு நகத்தில் விரிசல் போன்று காணப்படும். இதற்குக் காரணம் பூஞ்சை தொற்றுதான். அதிகமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்களுக்கு நகங்கள் வலுவிழந்து எளிதில் உடைந்துபோகும்.

நகங்களில் வெள்ளையான திட்டுக்கள் போன்று புள்ளிகள் காணப்படுவது கால்சியம் மற்றும் ஜிங்க் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னையாகும். இதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட சரியாகும். நகங்களில் கருப்பு கோடுகள் காணப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. நகங்களில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் இப்படி ஏற்படலாம். காயங்கள் எதுவும் இல்லாமலேயே கருப்பாக இருந்தால் மெலனோமா என்கிற ஒருவகை புற்று நோயாகக் கூட இருக்கலாம். நீண்ட நாட்களாக நகத்தில் கருப்பாக கோடுகள் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

விரல்களுக்கு அழகு சேர்ப்பதே நகங்கள்தான்‌. அவை அடிப்பட்டு பெயர்ந்தாலோ அழகு கெடுவதுடன் வலியும் ஏற்படும். சிலருக்கு அடிபடாமலே நகங்கள் ஒடிந்து விழும். இதற்கு பூஞ்சை தொற்று மற்றும் சொரியாசிஸ் போன்ற பிரச்னைகள் காரணமாகலாம். பூஞ்சை தொற்று காரணமாக நகம் பெயர்வதற்கு சில அறிகுறிகள் தென்படும்.

இதையும் படியுங்கள்:
கோடை வெப்பத்தைத் தணிக்கும் பல்வேறு மாநில பாரம்பரிய குளிர் பானங்கள்!
Healthy nails

நகம் மஞ்சள் நிறத்துக்கு மாறும். நகத்தின் நுனிப்பகுதி வீக்கம் அடைந்து சீழ் வடியவும் செய்யும். இதை குணப்படுத்த மருத்துவர்கள் பூஞ்சை கொல்லி மருந்துகளை பரிந்துரைப்பார்கள். பூஞ்சை தொற்று ஏற்படாமல் இருக்க நகங்களில் மண் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம். நகங்களை அவ்வப்பொழுது வெட்டி விடுவதும், கை, கால் நகங்களில் அடிபட்டால் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதும் இதற்கு பயனளிக்கும்.

வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஷாம்பூ சேர்த்து அந்த கரைசலில் பாதங்களை ஐந்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும். பிறகு பிரஷ் அல்லது ஸ்கிரப் கொண்டு நகங்களின் இடுக்குகளிலும், ஓரங்களிலும், மேற்பகுதியிலும் மென்மையாக தேய்த்து கழுவ நகங்கள் பளிச்சென பளபளக்கும்.

நகங்களை மட்டுமல்லாமல், பாதத்தையும் சோப்பு போட்டு தேய்த்து கழுவி காட்டன் துணியால் ஈரம் போகத் துடைத்து விடவும். பிறகு ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் எடுத்து பாதம் மற்றும் நகங்களில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய ஆரோக்கியமான நகங்கள் மற்றும் பாதங்களைப் பெறலாம்.

நகங்களை அழகு படுத்துவதாக எண்ணி செய்யப்படும் நெயில் ஆர்ட், ஜெல் மற்றும் அக்ரிலிக் நகங்கள் நம் நகங்களை வலுவிழக்கச் செய்வதுடன் நகங்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com