
கோடை காலமாக இருந்தாலும் சரி, குளிர் காலமாக இருந்தாலும் சரி பலதரப்பட்ட மருத்துவ பலன்களை தரும் மரம் வேப்பமரம். கோடையில் வரும் பல வகையான உடல்நலப் பிரச்னைகளுக்கு வேப்பிலை உதவும் என்கின்றனர். வேப்பிலை உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை உள்ளது. இந்த கோடை காலத்தில் வேப்ப இலை கலந்த தண்ணீரை குடித்து வந்தால் அது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்கின்றனர். வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும், அதனை பார்ப்பதாலும் ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையால் வேம்பு '21ம் நூற்றாண்டின் மரம்' என அறிவிக்கப்பட்டது.
வேப்பிலை பொதுவாக பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக மக்களால் அறியப்படுகிறது. ஆனால் வேப்பிலை ஆண்களை அச்சுறுத்தும் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் என்று NCBI-யின் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
கணையம் தன் வேலையைச் சரியாக செய்யும் . இதன் காரணமாக இயற்கையான செயல்முறை மூலம் இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் வேப்ப இலைகளில் இதுபோன்ற பல பண்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
உலகெங்கும் ஆண்களிடையே பரவலாக அறியப்படும் ஒரு நோய் புரோஸ்டேட் கேன்சர். இந்த நோயை குறைக்கும் ஆற்றல் வேப்பிலையில் உள்ளது என்கிறார்கள் சிங்கப்பூர் நேஷனல் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். வேப்பிலையிலிருந்து உருவாக்கப்படும் ஒரு மருந்து கலவை 'நிம்போலைட்'. இதை தொடர்ந்து 12 வாரங்கள் எடுத்துக் கொண்ட புரோஸ்டேட் புற்றுநோய் நோயாளிகளின் புற்றுநோய் கட்டிகளின் அளவு 70 சதவீதம் குறைந்ததும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி 50 சதவீதம் குறைந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வேப்பிலையை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்க்க பித்தத்தால் ஏற்படும் மயக்கம் சரியாகும். குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும். பித்தவெடிப்பிற்கு வேப்பிலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பித்தவெடிப்பு மற்றும் கால் பாதம் எரிச்சல் போன்றவை குணமடையும்.
வேப்பிலையை வெந்நீரில் போட்டுக் குளித்தால் அலர்ஜி, சிரங்கு, வீக்கம் மற்றும் பல சரும வியாதிகளுக்கு நல்லது.
வேப்பங்கொழுந்தை அரைத்து மோரில் கலக்கிக் குடித்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும். தினமும் காலை நேரத்தில் 10 வேப்பங்கொழுந்து எடுத்து அதனுடன் 5 மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமடையும்.
சிறிதளவு மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்து முகத்தில் வரும் முகப்பருக்கள் மீது தடவினால் அவை வாட்டம் கண்டு உதிர்ந்து போவதுடன் முகமும் பளபளக்கும்.
சில பெண்களுக்கு முகத்தில் அரும்பு மீசை இருக்கும். வேப்பங் கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் ஆகியவற்றை காய வைத்து, மாவு போல அரைத்து, தினசரி பூசி வந்தால், ரோமங்கள் நீங்கி, மீண்டும் முளைக்காமல் இருக்கும்.
மிகவும் பழமையான வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப் பட்டை, காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடித்து சூரணம் செய்து அதை 25 கிராம் அளவு தேனில் கலந்து காலையில் சாப்பிட உடல் வலிமையும், வனப்பும் அதிகரிக்கும். இந்த சூரணம் ஒரு காயகல்பமாகும்.
காய்ந்த வேப்ப இலைகளை துாளாக்கி, சாம்பிராணி சேர்த்து புகை போட்டால், வீட்டில் கொசுத் தொல்லை இருக்காது. வேப்பிலையை உலர வைத்து அவற்றை மெலிதான துணியில் சுருட்டி அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் வைத்திருக்கும் மூட்டைகளில் போட்டு வைத்தால் புழுவோ அல்லது வண்டோ வராது. கம்பளி ஆடைகளை வைக்கும் பெட்டிகளின் அடியில் உலர்ந்த வேப்பிலையை போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.