இயற்கை வைத்தியம் என்று வரும்போது அதில் வேப்ப மரத்தின் எல்லா பாகங்களும் பிரதானமாக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வேப்ப இலையில் இருந்து தயாரிக்கப்படும் வேம்பு நீர் பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. எனவே தினசரி காலையில் வெறும் வயிற்றில் வேம்பு நீரை குடிப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நாம் காணலாம். சரி, வாருங்கள் இப்பதிவில், தினசரி காலையில் வேம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி ஆராய்வோம்.
நச்சு நீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: வேம்பு நீர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. மேலும் இது நமது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்பதால், காலையில் வெறும் வயிற்றில் வேம்பு நீர் குடிப்பது நல்லது. இது கல்லீரலில் உள்ள நச்சுக்களைத் தூண்டி, அவற்றை வெளியேற்ற உந்துகிறது. வேம்பு நீரின் சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
குடல் ஆரோக்கியம்: வேம்பு நீர் இயற்கையாகவே செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் செரிமான செயல்பாடு மேம்பட்டு குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. வழக்கமாக வேம்பு நீரை உட்கொள்வதால், வயிற்றில் வீக்கம் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான குடல் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
சரும புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியம்: ஆரோக்கியமான மற்றும் பிரகாசிக்கும் சருமத்தை மேம்படுத்துவதில் வேம்பு நீர் மிகவும் புகழ்பெற்றது. வேப்பிலையின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, தழும்புகள் மற்றும் பிற தோல் பிரச்சனைகளை எதிர்த்து போராடி தெளிவான சருமத்திற்கு வழிவகுக்கும். இது ரத்தத்தை சுத்திகரிப்பதால், சருமத்தின் நிறத்தை அதிகரித்து இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கும்.
ரத்த சக்கரை கட்டுப்படும்: ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியாமல் போராடும் நபர்களுக்கு வேம்பு நீர் ஒரு சிறந்த தேர்வாகும். இது குடலில் குளுக்கோஸ் உறிஞ்சிதலைக் குறைத்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நீரிழிவு நோயை நிர்வாகிப்பதற்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதற்கும் உதவுகிறது.
வாய் ஆரோக்கியம்: வேம்பு நீர் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், வாய் துர்நாற்றம், ஈறு நோய்கள், பல் தொற்று போன்றவற்றை குறைக்கிறது. இதை வழக்கமான இயற்கை மௌத் வாஷாகப் பயன்படுத்தலாம்.
வேம்பு நீர் தயாரிக்க, சிறிதளவு வேப்பிலை மற்றும் வேப்பம்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.