
இன்றைய காலத்தில் நம் மோசமான வாழ்க்கை முறையால் ஏற்படும் பல நோய்களில் புற்றுநோயும் ஒன்று. ஆனால், நாம் அன்றாடம் கடைபிடிக்கும் சில எளிய பழக்கவழக்கங்கள், இந்த நோயின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிலும் குறிப்பாக, இரவில் நாம் மேற்கொள்ளும் ஒரு எளிய மாற்றம், நம் உடல்நலத்தைப் பாதுகாக்க உதவும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இரவில் நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒரு பழக்கம் குறித்தும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
பெரும்பாலானோருக்கு இரவு உறங்கச் செல்லும் முன் மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. ஆனால், இந்த டிஜிட்டல் சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீல ஒளி (Blue Light), நம் தூக்கச் சுழற்சியைப் பெரிதும் பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நீல ஒளி, நமது உடலின் இயற்கையான கடிகாரமான சர்க்காடியன் ரிதத்தை சீர்குலைக்கிறது. இதன் விளைவாக, தூக்கத்தை வரவழைக்க உதவும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தி குறைகிறது.
மெலடோனின் என்பது வெறும் தூக்க ஹார்மோன் மட்டுமல்ல. இது உடலில் கட்டி வளர்ச்சியை அடக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. மெலடோனின் அளவு குறையும்போது, புற்றுநோய் செல்கள் உடலில் வளர சாதகமான சூழல் உருவாகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சர்க்காடியன் ரிதம் என்பது நமது உடலின் தினசரி செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு உயிரியல் கடிகாரமாகும். இது தூக்கம், விழிப்பு, ஹார்மோன் சுரப்பு, செரிமானம் போன்ற பல முக்கிய உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்காடியன் ரிதம் சீர்குலைவது, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.
நீண்டகால சர்க்காடியன் ரிதம் சீர்குலைவு, குறிப்பாக புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இரவு ஷிஃப்டில் வேலை பார்ப்பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்க்காடியன் ரிதம், உடலின் டிஎன்ஏ பராமரிப்பு, ஹார்மோன் செயல்பாடு மற்றும் செல் பிரிவையும் ஒருங்கிணைக்கிறது. இது சரியாக இயங்காதபோது, அசாதாரண செல்களைக் கண்டறிந்து அகற்றும் உடலின் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
சரி செய்வது எப்படி?
ஆரோக்கியமான சர்க்காடியன் ரிதத்தைப் பராமரிப்பதன் மூலமும், புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதன் மூலமும் நமது உடலைப் பாதுகாக்கலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். உறங்கச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அனைத்து டிஜிட்டல் திரைகளையும் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இது மெலடோனின் இயற்கையான உற்பத்தியை உறுதி செய்து, நல்ல தூக்கத்தை மட்டுமல்லாமல், புற்றுநோய்க்கு எதிரான உடலின் பாதுகாப்பையும் மேம்படுத்தும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)