நிலவேம்புக்கு இணையான ஆபூர்வ மூலிகை வெள்ளறுகு!

வெள்ளறுகு மூலிகை
வெள்ளறுகு மூலிகை
Published on

வெள்ளறுகு மூலிகை துளசிச் செடியை போன்ற வடிவமுடையதாகவும், குறுகிய, நீண்ட அம்பு போன்ற வடிவமுடைய இலைகளை உடையதாகவும் காட்சியளிக்கும். தண்டும், இலையும் சேரும் இடத்தினின்று காம்பில்லாத கொத்தான மலர்களை பெற்றிருக்கும். இந்திய மண்ணில் பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கி கங்கை ஆற்றின் தென்கரைப் பகுதி ஊடாகப் பரவி தென்னிந்திய பகுதிகளிலும், குறிப்பாக கடற்கரை பகுதிகளிலும் இது காணப்படும்.

சாதாரணமாக இந்தத் தாவரம் நீர் பாங்கான பகுதிகளில் தழைத்து வளரக்கூடிய ஒன்று. இது ஆண்டு முழுவதும் பூக்கும். இதன் விதைகள் ஒரு குப்பியில் அடைக்கப்பட்டது போன்று பளபளப்பான அமைப்பைக் கொண்டிருக்கும்.

எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்ட வெள்ளறுகு உடலுக்கு உரம் ஊட்டும் டானிக்காக அமைகிறது. இரத்தத்தை சுத்திகரிப்பது, வாத நோயை போக்குவது, வீக்கத்தை கரைப்பது, மனக்கோளாறை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது, இதயத்துக்கு பலமூட்டுவது, பசியை தூண்டுவது, மலத்தை இளக்குவது, உடல் வெப்பத்தை போக்குவது மற்றும் உடலில் கலந்த நச்சுகளை நீக்குவதாகவும் விளங்குகிறது.

தற்போது புகழ் பெற்றிருக்கும் நிலவேம்புக்கு இணையாக இது சொல்லப்படுகிறது. மலேரியா காய்ச்சலைப் போக்குவதில் தலைசிறந்த மூலிகை என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

வெள்ளறுகில் ஆக்சாலிக் அமிலம் என்னும் மருத்துவப் பொருளும், சிரேட்டின் என்னும் மருத்துவ வேதிப்பொருளும் மிகுதியாக அடங்கியுள்ளன. வெள்ளறுகின் வேர் பகுதி கொடிய நச்சுக் காய்ச்சல்களை போக்குவதில் முதன்மையானது என பல்வேறு மருத்துவ ரசாயன பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளறுகின் இலை சர்க்கரை நோய், புற்றுநோயை குணப்படுத்தும், கல்லீரலுக்கும், மண்ணீரலுக்கும் பலம் சேர்க்க வல்லது. உடலில் சேர்ந்துள்ள கொழும்பு சத்தை கரைத்து உடல் பருமனை குறைக்க வல்லது. வெள்ளறுகை உள்ளுக்குப் பயன்படுத்துவதால் ஏதும் பக்க விளைவுகள் ஏற்படாது. மிகவும் பாதுகாப்பானதாகவும், பணம் செலவில்லாததும் கூட இதன் சிறப்பம்சம்.

வெள்ளறுகு சமூலத்தை (இலை, பூ, தண்டு, வேர் அனைத்தும்) உலர்த்திப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பல ஆண்டுகள் கெடாமல் நின்று பயன் தரக்கூடியது. வெள்ளறுகில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம், குளோரைட், சல்பேட், பாஸ்பேட் மற்றும் வைட்டமின்களான 'சி' மற்றும் ‘பி' ஆகியன செறிந்து அடங்கியுள்ளன.

கஷாயம் செய்முறைகள்:

1. வெள்ளறுகு சமூலத்தை ஒரு கைப்பிடி எடுத்து 1 கப் நீர் விட்டு அரை கப் அளவாக சுருக்கி இனிப்பு சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க கடுமையான வயிற்றுப்புண், பொருமல், வாயு பிடிப்பு, நரம்புகளை பற்றிய வீக்கம், வலி, சொறி, சிரங்கு ஆகியன குணமாகும்.

2. வெள்ளறுகு சமூலத்தை மையாக அரைத்து விழுதாக்கி உடலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல், அருவருப்பு தரும் சிரங்குகள், தலை பொடுகு இவற்றின் மேல் பூசி வர சில நாட்களில் குணம் தரும்.

இதையும் படியுங்கள்:
ஈஸ்டர் தீவின் மர்மமான மோவாய் சிலைகள்!
வெள்ளறுகு மூலிகை

3. வெள்ளறுகு இலையை அரை கைப்பிடி அளவு எடுத்து சுத்தப்படுத்தி அரைத்து விழுதாக்கி அதனோடு சிறிது மிளகுத்தூளும், ஒரு பல் பூண்டும் சேர்த்து பாலில் காய்ச்சிக் கொடுத்து வந்தால் மேக நோய் குணமாகும்.

4. வெள்ளறுகு சமூலத்தை மைய அரைத்து வெண் மிளகு அரை தேக்கரண்டி அளவு சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடித்து அதனுடன் சிறிது பசுவின் வெண்ணெய் சேர்த்து உள்ளுக்கு பருகுவதால் உடல் வெப்பம் தணியும். சிறுநீர் தாரை எரிச்சல், மூலச்சூடு, ஆசனவாய் எரிச்சல் ஆகியன தணியும். சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

பல கொடுமையான நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப் போக்க வல்லது வெள்ளறுகு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com