இதய நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்பது விஷயங்கள்!

இதய நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்பது விஷயங்கள்!

தய நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் அதற்கான சிகிச்சையில் இருப்பவர்கள் சில விஷயங்களில் மற்றவர்களை விட அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றில் சில இங்கே…

* காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும், இரவு உணவை பத்து மணிக்கு மேல் எடுத்துக்கொள்கிறவர்களுக்கும்தான் இதய நோயின் தாக்கம் அதிகமுள்ளது என்கிறார்கள், ‘ஐரோப்பியன் ஜர்னல் ஆப் கார்டியாலஜி’ ஆய்வாளர்கள்.

* பற்களின் ஆரோக்கியத்துக்கும் இரத்த அழுத்தத்துக்கும் தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியமான ஈறுகளைக் கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தம் சீராக இருக்கும். வாய் வழி ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் அது இதயம் சார்ந்த பிரச்னைகளை அதிகரிக்கும். எனவே, ‘இதய நோய்க்கு ஆளானவர்கள் தினமும் மூன்று முறை பல் துலக்குவது நல்லது’ என்கிறார்கள் தென்கொரியாவின் சியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

* இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்யவேண்டிய நிலை இருந்தால் மதிய வேளைக்குப் பின்னர் செய்வதுதான் பாதுகாப்பானது என்பதை பல்வேறு ஆய்வுகள் செய்து கண்டறிந்து தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது லான்செட் மெடிக்கல் ஜர்னல்.

* புகைப் பிடிப்பவர்கள் அதை இதய அறுவை சிகிச்சைக்கு முன் கைவிடுவது நல்லது. முடியாதவர்கள் அட்லீஸ்ட் நான்கு வாரங்களுக்கு முன்னராவது புகைப்பதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் அறுவை சிகிச்சையிலிருந்து சீக்கிரம் மீண்டு வர முடியும் என்கிறார்கள். அதேபோல, புகைப்பவர்களின் அருகில் இருப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

* ‘இதய சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிவரும் இதய நோயாளிகள் வீட்டிற்கு வந்ததும் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் நோய் தாக்குதலுக்கு ஆளாக அதிக வாய்ப்புகள் உண்டு’ என்கிறார்கள் டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

* ‘இதய நோயாளிகள் இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நிற்பது, மெதுவாக நடப்பது என ஏதேனும் உடல் இயக்க செயல்களில் ஐந்து நிமிடங்கள் செலவழிக்க வேண்டும்’ என்கிறார்கள் கனடாவின் ஆர்மெக்கெடோன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

* ‘இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் அடிக்கடி டிராபிக் நெரிசலில் சிக்கிக்கொள்ள கூடாது. இதனால் இந்நோயின் தீவிரம் அதிகரிக்கும்’ என்கிறார்கள் பிரிட்டன் செப்பர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள். காற்று மற்றும் ஒலி மாசுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

* தினமும் பகலில் மதிய உணவுக்குப் பின் 15 முதல் 20 நிமிடங்கள் வரை படுத்து உறங்கி ரிலாக்ஸ் செய்யும் இதய நோயாளிகளின் நோய் தீவிரம் குறைகிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். தினமும் மதிய உணவுக்குப் பின் 3 மணிக்குள் இந்த குட்டி தூக்கம் போடவேண்டும் என்கிறார்கள்.

* ‘இதய நோயாளிகள் காற்று மாசு அதிகமாக இருக்கும் இடத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் காற்று மாசு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு நிலையை ஏற்படுத்தலாம்’ என்கிறார்கள் சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com