குரங்கம்மையைத் தொடர்ந்து உலகை அச்சுறுத்தும் புதிய வைரஸ் ஓரோபோச். இதற்கு தடுப்பூசியோ மருந்தோ இல்லை என்று கூறப்படுகிறது. ஓரோபோச் காய்ச்சல் என்பது வெப்பமண்டல வைரஸ் தொற்றாகும். இது கொசுக்கடியின் மூலம் இரத்தத்தில் மனிதர்களுக்குப் பரவுகிறது.
டெங்கு காய்ச்சலைப் போன்றிருக்கும் ஓரோபோச் காய்ச்சலால் உலகில் முதல் இரு உயிரிழப்புகள் பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளது. இந்நோய் கிருமியால் பாதிக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மரணம் அடைந்திருப்பதாக பிரேசில் சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
இந்நோய் ஓரோபோச் வைரஸ் மூலம் உருவாகி வரும் ஜுனோடிக் ஆர்போவைரல் நோயாகும். ஓரோபோச் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் முதன் முதலில் பிரேசிலில்தான் கண்டறியப்பட்டது. இது முதன் முதலாக 1955ல் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்காய்ச்சல் ஓரோபோச் வைரஸால் பாதிக்கப்பட்ட மிட்ஜ் எனப்படும் சிறு பூச்சிகள் கடிப்பதன் மூலமோ அல்லது கொசுக்கள் மூலமோ மனிதர்களுக்குப் பரவுகிறது.
இந்த வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடியாகப் பரவுவதில்லை. நகர மயமாக்கல், காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் இந்த வைரஸ் பெருக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓரோபோச் (Oropouche) வைரஸின் அறிகுறிகள்: இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள் டெங்குவைப் போலவே இருக்கும். ஓரோபோச் வைரஸால் பாதிக்கப்பட்ட 4 முதல் 8 நாட்களுக்குள் அதிகக் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர், குமட்டல், வாந்தி, மூட்டு விறைப்பு அல்லது வலி, ஒவ்வாமை, கண்களுக்கு பின்னால் வலி போன்றவை ஏற்படும்.
இதற்கான சிகிச்சை: இந்நோய்க்கான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான தடுப்பூசியோ மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இக்காய்ச்சல் பரவுவதை தடுக்க கை, கால் முழுவதையும் மறைக்கும்படியான ஆடைகளை அணிவது நல்லது. கதவுகள் ஜன்னல்களில் கொசு வலைகளை பதிப்பது நல்லது. கொசு விரட்டிகளைப் பயன்படுத்தவும். மாலை நேரங்களில் ஜன்னல், வாசல் கதவு ஆகியவற்றை மூடி வைப்பது கொசுக்கள் வீட்டுக்குள் வருவதை தடை செய்யும்.