உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பஞ்ச மூலிகைகள்!

மூலிகைகள்
மூலிகைகள்

பொதுவாகவே, மனித உடலுக்கு சக்தி என்பது மிக மிக முக்கியமாகும். நமது உடலில் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும். உடல் வலுவிழந்தால் தானாகவே நோய் பாதிப்புகள் நம்மைச் சூழ்ந்துக் கொள்ளும். உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெறுவதற்கு பல மூலிகைகள் உதவுகின்றன. அப்படி உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பஞ்ச மூலிகைகளின் பலன்கள் குறித்துக் காண்போம்.

1. மர்கோசா இலை (வேப்பிலை)

வேப்பிலை
வேப்பிலை

ஓர் ஆற்றல்மிக்க கிருமி நாசினி, ஆன்டி இம்பிளமென்ரி, ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி பங்கல் குணங்களை கொண்டது இது. தினமும் 5 கிராம் வேப்பிலையை எடுத்து நன்கு கழுவி அதை மைய அரைத்து காலை வெறும் வயிற்றில் 15 நாட்கள் மட்டும் சாப்பிட நிச்சயம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வேம்பு உங்கள் உடலை உட்புறமாக குளிர்விக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. பற்களில் ஏற்படும் பற்சொத்தை, ஈறுகளில் பிரச்னை போன்றவற்றைப் போக்கும் பண்பு வேப்பிலைக்கு இருக்கின்றது. ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்கள் அதிகம் உள்ள இலைகளில் வேப்பிலையும் ஒன்று. இதனை மென்று சாப்பிட்டு வந்தால் நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலேயே அதிகரித்து விடும். அன்று முதல் நோய் வருவதும் குறைவாக இருக்கும். வேப்பிலைக்கும் நீரிழிவு நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக வேப்பிலை பயன்படுத்தலாம்.

இரைப்பை குடல் சார்ந்த பிரச்னைகளுக்கு வேப்பிலை தீர்வாக இருக்கிறது. செரிமானத்தை சீர்படுத்தி நம்முடைய வயிற்றை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கின்றது. காயங்கள் பட்டவுடன் மருந்துகளை தேடாமல் வேப்பிலையை பேஸ்ட்டாக்கி அதில் போட்டால் நல்ல தீர்வைப் பெறலாம்.

2. ஸ்டோன் பிரேக்கர் – நிரூரி (கீழாநெல்லி)

கீழாநெல்லி
கீழாநெல்லி

இந்த இலையை கைப்பிடி அளவு எடுத்து மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுத்தப்படுவதுடன், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இது ஹெபடைடிஸ் பி வைரஸ் எதிர்ப்பு சக்தி கொண்டது. இயற்கை நமக்குத் தந்த வரப்பிரசாதம்தான் கீழாநெல்லி. இந்த கீழாநெல்லியால் பலவித நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்தாலும், முக்கியமாக உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரண்டு உறுப்புகளுக்கு மட்டும் கீழாநெல்லி செய்யும் அற்புதத்தைப் பார்க்கலாம். கீழாநெல்லியை சுத்தம் செய்து, நன்றாக அரைத்து அந்த விழுதை மோருடன் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை மட்டுமல்ல, நீரிழிவு நோயும் சேர்ந்தே குணமாகும். கீழாநெல்லி பொடி என்றே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதையும் பயன்படுத்தலாம்.

கீழாநெல்லி கண்களின் பார்வைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. கீழாநெல்லி இலை ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. கீழாநெல்லி இலையை அரைத்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் உடைந்து வெளியேறும். மலச்சிக்கல் பிரச்னைகளையும் கீழாநெல்லி குணப்படுத்துகிறது. கல்லீரலில் இருக்கும் நச்சுகளை அவ்வப்போது வெளியேற்றவும் கல்லீரல் கோளாறுகள் உண்டாகாமல் இருக்கவும் கீழாநெல்லி சாறு குடிக்கலாம்.

3. இஞ்சி

இஞ்சி
இஞ்சி

இது ஒரு ஆன்டி இம்பிளமென்ரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் ஏஜெண்ட். அதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கும் ஆற்றல் உடையது. தினமும் ஒரு அரை இஞ்ச் இஞ்சியை தோல் சீவி சாப்பாட்டிற்கு முன் சாப்பிட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இஞ்சி ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது. இது ஜீரண மண்டல உறுப்புகளைப் பலப்படுத்தவும், செரிமானம் சீராக நடைபெறவும் உதவி புரிகிறது. ஜீரண மண்டலப் பாதையில் பாராசைட்கள் எனும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் வளர்வதை ஒருபோதும் அனுமதிக்காத குணம் கொண்டது இஞ்சி.

இஞ்சி பொதுவாக வெப்பத்துடன் தொடர்புடையதாக இருப்பினும், வியர்வையை உண்டாக்கும். கோடைக்காலத்தில் வெப்பமான காலநிலையில் உடலை குளிர்விக்க உதவுகிறது. இதற்கு ஒரு கிளாஸ் குளிர்ந்த இஞ்சி கலந்த எலுமிச்சைப் பழச்சாற்றை எடுத்துக் கொள்ளலாம்.

4. இண்டியன் கூஸ்பெர்ரி (நெல்லிக்காய்)

நெல்லிக்காய்
நெல்லிக்காய்

இதில் அதிகளவில் வைட்டமின் சி யும், ஆன்டி ஆக்ஸிடென்ட்களும், பீட்டா கரோட்டினும் உள்ளது. ஒரு நெல்லிக்காய் 20 சிட்ரஸ் பழங்களுக்கு சமம். ஆம்லா என்ற இந்திய நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. நெல்லி சாற்றை உட்கொள்வது புத்துணர்ச்சியை அளிக்கிறது. நெல்லி சாறு சாப்பிட முடியாதவர்கள் உலர்ந்த ஆம்லா பொடியை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட கல்லீரல் சுத்தமாகும். அதிலுள்ள நச்சுக்கழிவுகள் முற்றிலும் வெளியேறி, கல்லீரல் சிறப்பாக செயல்படும். நுரையீரலை பிரிரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும். செரிமானப் பிரச்னைகள் வராது, அல்சர் விரைவில் குணமாகும், கொலஸ்டிராலை குறைக்கும் மற்றும் முதுமையைத் தடுக்கும்.

5. பிராமி – குளோரி (வல்லாரை)

வல்லாரை கீரை
வல்லாரை கீரை

இது சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது. வல்லாரை கீரையை ஜூஸாக தினமும் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். வல்லாரைக் கீரை இலைகள் 10 எடுத்து வெந்நீரில் நன்கு கழுவி அலசிய பின் மிளகு 5 எடுத்து தூள் செய்து சேர்த்து அரைத்து மோருடன் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை சாப்பிட்டு வர தளர்வுற்ற தேகம் இறுகும். மூளையில் திசுக்கள் வலிமை பெறும். மூளைக் கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, அசதி மற்றும் மயக்கம் சரியாகும்.

கண் பார்வை மங்கல், காது மந்தம், நினைவு தடுமாற்றம், நுரையீரல் இறுக்கம், இதயச் சோர்வு, கல்லீரல் அழற்சி, சிறுநீரகக் குறைபாடு, இரத்த ஓட்டத்தடைகள், கீழ் மூட்டு வாதம், நீரடைப்பு, தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் மறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com