உடல் பருமன் என்பது இந்த நாட்களில் மிகவும் பொதுவான பிரச்னையாகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்னை நீடிக்கிறது. தவறான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம் போன்றவைதான் இதற்கு முக்கிய காரணமாகும்.
உடல் பருமன் அல்லது உடல் எடை அதிகரிப்பால் ஒருவர் தனது முழு ஆளுமைத்திறனையும் பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் தன்னம்பிக்கை குறைந்துவிடுகிறது. மேலும் உடல் எடை அதிகரிப்பதால் இன்னும் பல நோய்களும் நம்மை நெருங்குகின்றன. ஆகையால் உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். உடல் எடையை சில இயற்கையான வழிகளிலும் நாம் குறைக முடியும்.
உடல் எடையைக் குறைக்க பெரும்பாலானவர்கள் பலவித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிலர் ஜிம்முக்கு சென்று கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிலர் உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சில எளிய வகையை பின்பற்றினால் நம்மாலும் உடல் எடையை குறைக்க முடியும்.
உடல் எடையை குறைப்பதற்கு பப்பாளி சிறந்த உணவாகும். பப்பாளி குறைந்த கலோரியுள்ள பழமாகும். இதில் அதிக தண்ணீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. விரைவில் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பப்பாளியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பப்பாளியில் கலோரி குறைவாக இருப்பதோடு, அதிக சத்தும் உள்ளது.
ஒருவர் தனது அதிகரித்துவிட்ட எடையைக் குறைக்க விரும்பினால் தினமும் பப்பாளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதோடு, உடல் பருமனையும் வேகமாக குறைக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் சாப்பிட்டு நீண்ட நேரம் ஆனாலும் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பயனற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
100 கிராம் பப்பாளியில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதுடன் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கொழுப்புகள் சேர அனுமதிக்காது.
உடல் எடையைக் குறைக்க பப்பாளி பழச்சாறையும் குடிக்கலாம். பப்பாளியை காலை உணவில் சேர்க்கலாம். பப்பாளியை சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் பிளாக் சால்ட், மிளகு சேர்த்து சாப்பிடுவது நல்லது. உடல் பருமனை பப்பாளி விரட்டும் என்றாலும் அளவுக்கு மீறி அதை சாப்பிடக்கூடாது. இதில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படலாம்.