பரங்கிக்காய் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பொங்கல்தான். பொங்கலுடன் சேர்த்து படைக்கப்படும் படையலில் தவறாது இடம்பெறுவது பரங்கிக்காய். பரங்கிப் பூவை மார்கழி மாதத்தில் கோலத்தின் நடுவில் வைத்து விநாயகரை வழிபடுவது தென்னிந்தியர்களின் மரபு. பரங்கிக்காய் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பரங்கிக்காயைப் பற்றிய சில பயன்பாடுகளை இந்தப் பதிவில் காண்போம்.
பரங்கிக்காயில் நீர் சத்தும், உயிர்ச் சத்துக்களும், உப்புகளும் அதிகம் காணப்படுகின்றன. பரங்கிக்காய் இனிப்பு நிறைந்த காய். பரங்கிக்காயை அரசாணிக்காய் என்றும் கூறுவர்.
வெளிப்புறம் பச்சை கலந்த மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். இந்த பரங்கிக்காய் அனைத்து சூழலிலும் வளரும் தன்மை கொண்டது. நன்கு விளைந்த காயின் எடை சுமார் 1.5 கிலோ கிராம் முதல் 6 கிலோ வரை இருக்கும்.
பரங்கிக்காயின் பயன்கள்:
பரங்கிக்காய் ஜூஸ் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஜூஸை குடித்து வந்தால் அதில் உள்ள 'பெக்டின்' கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.
பரங்கிக்காய் ஜூஸில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டினை சீராக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
அடிக்கடி ஏதேனும் ஒரு உடல் நலப் பிரச்னையால் அவஸ்தைப்பட்டு வருபவர்கள், ஒரு வாரம் பரங்கிக்காய் ஜூஸை குடித்து வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் கனிமச் சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தினை வலிமைப்படுத்துவதை அறியலாம்.
உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டு வருபவர்கள் பரங்கிக்காய் ஜூஸை குடித்து வர, உடலில் உள்ள அதிகப்படியாக வெப்பம் குறையும்.
பரங்கிக்காய் ஜூஸ் இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களில் தங்கி உள்ள கொழுப்புகளைக் கரைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பினைக் குறைக்கும்.
சிறுநீரகம் மற்றும் பித்தப்பைகளில் கற்கள் இருந்தால் அதை பரங்கிக்காய் ஜூஸ் சரி செய்யும். அதற்கு தினமும் அரை தம்ளர் பரங்கிக்காய் ஜூஸை மூன்று வேளை குடித்து வர வேண்டும்.
இது நீர் காய் என்று பிடிக்காமல் ஒதுக்குபவர்கள் அதிகம் உண்டு. அவர்கள் இதன் நற்பயன்களை அறிந்து உணவில் சேர்த்து ஆரோக்கியம் காக்க வேண்டியது அவசியம்.