பாப்கார்ன் - நோய்களை நொறுக்கும் நொறுக்குத்தீனி!

Popcorn
Popcornhttps://tamil.asianetnews.com

சிறுவர், சிறுமியர்கள் கொரிக்க ஆசைப்படும், ‘பாப்கார்ன்’ காய்கறிகள், பழங்களை விட மிகவும் சத்தானது. மேலும் இதை சத்து நிறைந்த, ‘சீர்படுத்தப்பாடத தங்கம்’ என்கிறார்கள் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். உப்பு, எண்ணெய் கலக்காமல் பாப்கார்ன் சாப்பிடுவதுதான் சிறந்தது என்கிறார்கள்.

சிலர் மிகவும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் பாப்கார்ன் இருக்கும். பொதுவாக, நொறுக்குத் தீனிகளில் நன்மை செய்வது மிகவும் குறைவு. ஆனால், எல்லாவற்றுக்கும் மாறாக பாப்கார்ன் உடலுக்கு பல அற்புத நன்மைகளை செய்கிறது. ஆனால், கடைகளில் கிடைக்கும் பல ரசாயனங்கள் தடவிய பாப்கார்ன்களுக்கு இது பொருந்தாது.

சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன், முழுக்க முழுக்க முழு தானியங்களால் ஆனது. எனவே, அதிக நார்ச்சத்து இதில் இருக்கும். இது செரிமானத்துக்கு பேருதவி புரியும். அது மட்டுமல்ல, வயிற்று உபாதை, குடல் சார்ந்த பிரச்னைகளை தீர்க்கும் திறனும் இதில் உள்ளது. பாப்கார்னில் அடங்கியுள்ள வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் , மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் மெக்னீசியம் போன்றவற்றால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

ஒரு முழு தானியமான பாப்கார்ன் மூலம் கிடைக்கப்படும் நார்ச்சத்துகள் இரத்த குழாய்களிலும், தமனியிலும் படிந்திருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. எனவே, உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கப்படுகிறது. பாப்கார்ன் நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றியாகும்.

புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்கும் அடிப்படைக் கூறுகளை எதிர்த்துப் போராடுவதே ஆன்டி ஆக்ஸிடென்டின் முக்கியப் பணியாகும். பாப்கார்னில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை செல் சேதத்தைத் தடுப்பதுடன், நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. அதாவது, ஓட்ஸ், கோதுமை, அரிசியுடன் ஒப்பிடும்போது,சோள உணவான பாப்கார்ன்களில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்றாலே, அங்கு அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை. மலச்சிக்கல் பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகளை நீக்குவதுடன், குடல், வயிறு சார்ந்த பிரச்னைகளை தீர்ப்பதில், பாப்கார்ன்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அந்த வகையில், பாப்கார்னை நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். அதிலுள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவின் வெளியீடு மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக இயக்குகிறது. இதற்கு தித்திப்பு கலக்காத பாப்கார்னை சாப்பிட வேண்டுமாம்.

ஒரு கிண்ணம் பாப்கார்ன் 30 கலோரிளை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு சிறிய பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸைக் காட்டிலும் 5 மடங்கு குறைவு. இதில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றை எளிதில் நிரப்பி, பசியை தூண்டும் ஹார்மோனை சுரக்காமல் தடுக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கூட இதனை உட்கொள்ளலாம்.

மக்காச்சோளத்தில் ‘பெருலின்’ அமிலம் உள்ளது. இது சூரிய வெப்பத்தால் ஏற்படும் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மாதவிடாய் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் பாப்கார்னின் மறுவடிவான கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

இதையும் படியுங்கள்:
மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தின் பலன்கள் தெரியுமா?
Popcorn

முதுமையில் ஏற்படும் பார்வைக்குறைபாடு, தசைகள் வலுவிழத்தல், ஆஸ்டியோபொரோசிஸ், முடி கொட்டுதல், ஞாபகமறதி போன்ற தீவிரத்தையும் இந்த பாப்கார்ன் கட்டுப்படுத்துகிறது. அதேபோல, ‘பெருலிக் அமிலம்’ என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதில் உள்ளதால், செரிமான ஆரோக்கியத்தை இவைதான் பராமரிக்கின்றன. அழற்சி குடல் நோய், அல்சைமர் நோய், சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கவும், இந்த ஃபெருலிக் அமிலம்தான் உதவுகின்றன.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், ஊளைச்சதையை கரைக்க விரும்புவர்கள் பாப்கார்னை மாலை நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உப்பு, வெண்ணெய், மசாலாக்கள் என எதுவுமே இல்லாத பாப்கார்ன்கள் மட்டுமே சாப்பிட்டால், உடல் எடை குறைய உதவும். அல்லது காய்கறிகளை சேர்த்து, ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி, சத்து நிறைந்த சிற்றுண்டியாக நாமே இதனை தயார் செய்யலாம். இதனால் உடலில் தேங்கியிருக்கும் கொலஸ்ட்ராலும் வெளியேறுகிறது. இதன் மூலம், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படாது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாப்கார்ன் தருவதைத் தவிர்க்கலாம். செரிமானம், குடல் அழற்சி இருப்பவர்களும் பாப்கார்னை தவிர்க்கலாம். பாப்கார்ன் எண்ணெய், வெண்ணெய், உப்பு சேர்க்காமல் தயாரிக்கப்படும்பட்சத்தில் அது முழுக்க முழுக்க ஆரோக்கியமானதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com