
மழைக் காலங்களிலும் அதனைத் தொடர்ந்து வரும் குளிர் மற்றும் பனிக் காலத்திலும் நம்மைத் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும் நோய்கள் பல உண்டு. குளிர் காய்ச்சல், இருமல், சளி, நுரையீரல் மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள் அவற்றில் சிலவாகும். இவற்றை வந்த பின் குணமாக்க முயற்சிப்பதை விட அவை வராமல் தடுப்பதே சிறந்த வழி. அதற்கு நாம் செய்யவேண்டியது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதேயாகும். நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க நாம் அருந்த வேண்டிய ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி / பழ ஜூஸ்களின் விவரத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வைட்டமின் C அடங்கிய சிட்ரஸ் பழங்களாகிய ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப்ஸ் போன்றவற்றின் ஜூஸ். இவை உடலுக்கு நாளொன்றுக்குத் தேவையான மொத்த வைட்டமின் C சத்தையும் தரக்கூடியது. இவற்றிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் செல் அழிவதைத் தடுத்து காப்பாற்றும் வலிமை கொண்டவை.
பச்சை நிற ஆப்பிள், கேரட், ஆரஞ்சு இந்த மூன்று வகைப் பழங்களையும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட ஜூஸ். இதில் அதிகளவில் நோயெதிர்ப்புச் சத்தும் வைட்டமின் C யும் உள்ளது.
ரூட் வெஜிடபிள்ஸ் ஆன பீட்ரூட், கேரட், இஞ்சி ஆகியவற்றுடன் ஆப்பிள் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஜூஸ். இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், தொற்று நோய் உண்டாவதற்கான அறிகுறியாகத் தோன்றும் வீக்கத்தைகக் குறைத்து நோய் வரும் அபாயத்தைத் தடுக்கிறது.
மற்ற கூட்டுப்பொருள் எதுவும் சேர்க்காது வீட்டில் தயாரிக்கப்படும் சிம்பிள் தக்காளி ஜூஸ். இதில் உள்ள ஊட்டச் சத்துக்களின் அளவு மிக அதிகம்.
காலே, தக்காளி, செலரி ஆகிய மூன்றும் சேர்த்து தயாரிக்கப்படும் க்ரீன் ஜூஸ். இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் வைட்டமின் A யும் இதில் அதிகளவில் உள்ளது.
கொஞ்சம் அதிகளவு ஸ்ட்ராபெரி பழங்களை கிவி பழங்களுடன் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்மூத்தி. இது ஏராளமான அளவு வைட்டமின் C சத்து கொண்டது.
ஸ்ட்ராபெரியுடன் மாங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்மூத்தி. இதிலும் நோயெதிர்ப்புச் சக்தியும் ஊட்டச் சத்துக்களும் அதிகளவு நிறைந்துள்ளன.
வாட்டர் மெலனுடன் புதினா சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ். இது வைட்டமின் C மற்றும் அர்ஜினைன் (arginine) சத்தும் உள்ளடக்கியது. அதன் பலனாக உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகளவில் உயர்கிறது. ஃபுளு ஜுரம் வரும் அறிகுறியாக தசைகள் தளர்ச்சியடையும்போது, தளர்வு நீக்கி மீண்டும் தசைகள் வலுவடையச்செய்யும் ஜூஸ் இது.
க்ரீன் ஆப்பிள் காலே லெட்டூஸ் சேர்த்து தயாரிக்கப்படும் க்ரீன் ஜூஸ். இது ஊட்டச் சத்துக்களின் பவர் ஹவுஸ் ஆகும். நோயெதிர்ப்புச் சக்தியை மிக அதிகளவில் உயரச் செய்யும். குழந்தைகள் கூட விரும்பிக் குடிக்கும் ஜூஸ் இது.
மேலே பட்டியலிட்ட ஜூஸ் வகைகளை தினம் ஒன்றாக செய்து அருந்துவோம். மழைக்கால நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிப்போம்.