மழைக்காலங்களில் அதிகமாகப் பரவும் நோய்த்தொற்றுகளில் ஒன்று, ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் அழற்சி நோய். இது பருவநிலை மாறுபாட்டால் வரும் வைரஸ் தொற்று. இது எளிதில் பிறருக்குப் பரவுகிறது. குறிப்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிக எளிதில் இந்த நோய் பரவக்கூடும். இது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் தன்மையுடையது. இதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் கண் பார்வைத் திறனை கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டது.
என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?
அடினோ வைரஸ் கண்களை தாக்குவதால் மெட்ராஸ் ஐ வருகிறது. மெட்ராஸ் ஐ வந்த ஒருவருக்கு கண் வலி, கண் இரத்த நிறத்தில் சிவந்துபோதல், கண்களில் நீர் வடிதல், கடுமையான தலைவலி, கண்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் வலி தோன்றும். மேலும், கண்களில் இருந்து வெள்ளை நிறத்தில் பீளை போல அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். பிறர் நமது முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்கே பயப்படுவார்கள். இந்த நோய் வந்தால் எந்த வேலையும் செய்ய முடியாமல் இருக்கும். கண்டிப்பாக டிவி, செல்போன் பார்க்கவோ, புத்தகம் படிக்கவோ கூடாது. கண்களுக்குத் தேவையான ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம்.
எப்படி பிறருக்குப் பரவுகிறது?
நேருக்கு நேராக ஒருவரைப் பார்ப்பதால் இந்த நோய் பரவாது. அவர்களது கைகளை பிடிக்கும்போது, விரல்களில் ஒட்டி இருக்கும் கிருமிகள் மூலம் பிறருக்குப் பரவும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மெட்ராஸ் ஐ நோய்த் தொற்று வந்தவர்கள் பயன்படுத்தும் சோப்பு, டவல், கைக்குட்டைகள், டம்ளர், தலையணை போன்றவற்றை பிறர் பயன்படுத்தக் கூடாது.
நோய்த்தொற்று கண்ட ஒருவர் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். குளிர் கண்ணாடியை போட்டுக் கொண்டால் பிறருக்குப் பரவுவது குறையும். மக்கள் கூட்டம் அதிகமுள்ள பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. மிக எளிதில் பிற குழந்தைகளுக்குப் பரவும் வாய்ப்புகள் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். நோய்த்தொற்று பீடித்த ஒருவரிடம் இருந்து அவருக்கு எளிதில் நோய் தொற்றிக் கொள்ளலாம்.
சிகிச்சை முறைகள்:
இந்தத் தொற்று கண்டவர்கள் சுயமாக வைத்தியம் செய்து கொள்ளாமல், கண் மருத்துவரை அணுகி அவர் தரும் சொட்டு மருந்தை தவறாமல் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் சொட்டு மருந்து போடும் முன்பும், போட்ட பின்பும் கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியம். இது ஒரு வாரத்தில் குறைந்து சரியாகும். கண்களில் இருந்து வழியும் நீரை சுத்தமான வெள்ளை துணி அல்லது கைக்குட்டையால் துடைக்கவும்.
காண்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்கள் மெட்ராஸ் ஐ வரும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நலம். நோய் சரியாகும் வரை கண்ணாடி அணிந்து கொள்ளலாம். அப்படியே லென்ஸ் பயன்படுத்தினாலும் மிக சுத்தமாக அதற்குரிய சொல்யூஷனில் கழுவி விட்டு பயன்படுத்துதல் நலம். அடிக்கடி கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவுவது நல்லது. கண்களுக்கு நல்ல ஓய்வு தருவது மிகவும் அவசியம். இதனால் நான்கைந்து நாட்களில் நோய் நீங்கி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.