புரோபயோட்டிக் உணவுகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் இரண்டையும் சேர்த்து உட்கொள்ளும்போது அவற்றிலுள்ள கூறுகள் ஒன்றுசேர்ந்து செயல்புரிந்து செரிமான இயக்கத்திற்கு வேறு எந்த உணவும் தர முடியாத அளவு ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன. செரிமானம் சிறப்பாக நடைபெற மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படவும் இவை உதவுகின்றன.
மலச்சிக்கல் என்பது ஓர் அசௌகரியமான நிலையைத் தருவது மட்டுமின்றி, நம்மை விரக்தி கொள்ளவும் செய்யும். பலர், குடல் இயக்கங்கள் கோளாறின்றி நடைபெறவும் மலச்சிக்கல் நீங்கவும் சிறந்ததொரு தீர்வு காண முயன்றுகொண்டே இருக்கின்றனர். புரோபயோட்டிக்ஸ் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் இவர்களின் பிரச்னைக்கு சரியான தீர்வு தருபவையாகும். புரோபயோட்டிக்ஸ் என்றால் என்ன? அவை எவ்வாறு மலச்சிக்கல் நீங்க உதவி புரிகின்றன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
புரோபயோட்டிக்ஸ் என்பவை உயிரோட்டமுள்ள மைக்ரோ ஆர்கானிசம்கள் ஆகும். பொதுவாக இவற்றை ‘நல்ல’ பாக்டீரியாக்கள் எனக் கூறுவதுண்டு. இந்த நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளும்போது அவை செரிமான இயக்கத்திற்கு சிறந்த முறையில் உதவக்கூடிய வயிற்றிலிருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை சமநிலையிலும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவி புரிகின்றன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கங்களைக் குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இவை உதவும்.
பச்சை இலைக் காய்கறிகளிலுள்ள கரையாத நார்ச்சத்து, மலக் கழிவுகள் ஒன்றாய் (bulk) சேர்ந்து சுலபமாக வெளியேற உதவி புரியும். உணவு ஜீரணமாகி சத்துக்கள் உறிஞ்சப்படவும் கழிவுகள் வெளியேறவும் நடைபெறும் செயல்பாடுகளில் ஒன்றானா பெரிஸ்டால்ஸிஸ் (peristalsis) எனப்படும் குடல் சுருங்கி விரியும் செயலை இலைக் காய்கறிகள் சிறந்த முறையில் ஊக்குவிக்கும்.
பச்சை இலைக் காய்கறிகளில் உள்ள மக்னீசியம் சத்து தண்ணீரை குடலுக்குள் கொண்டு வர உதவும். இதன் மூலம் கழிவுகள் நெகிழும் தன்மை பெற்று சிரமமின்றி மலக்குடல் வழியே வெளியேறிவிடும். இந்த காய்கறிகளிலுள்ள பிரீபயோட்டிக்குகளும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமுடன் வளர உதவும். அதனால் கோளாறில்லா ஜீரணம் நடைபெறும்.
பசலை, அகத்தி, பொன்னாங்கண்ணி, முருங்கை கீரை, புதினா, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை கூட்டு, பொரியல், சட்னி என எந்த முறையிலும் சமைத்து சாப்பிட்டு வந்தால் இரைப்பை குடல் இயக்கங்கள் சீராக இயங்கி உடல் ஆரோக்கியம் மேன்மை பெறும்.