சிறுநீரை அடக்குவது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும், நீண்ட காலத்திற்கு இது பல ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைய உலகில் வேலை செய்யும் பலர் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதன் பாதகமான விளைவு பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை. இந்தப் பதிவில் சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
சிறுநீர்ப்பை என்பது ஒரு தசை. இது சிறுநீரை சேமித்து வைத்து நாம் கழிவறை செல்லும்போது அதை வெளியேற்றுகிறது. சிறுநீர்ப்பையின் சுவர்களில் உள்ள தசைகள் சுருங்கி இருக்கும்போது சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. இது ஒரு தன்னிச்சையான செயல்பாடு என்றாலும், நாம் நம்முடைய விருப்பப்படி சிறுநீரை அடக்கிக் கொள்ளலாம். ஆனால், நீண்ட நேரம் சிறுநீரை அடக்கிக்கொள்வது சிறுநீர்ப்பையின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கிறது.
சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்:
சிறுநீரை நீண்ட நேரம் அடக்கிக் கொள்வதால், பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையில் பெருகி சிறுநீர் பாதை தொற்றை ஏற்படுத்தலாம். இது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கிக் கொள்வதால் சிறுநீர்ப்பை தசைகள் பலவீனம் அடைந்து, சிறுநீரை முழுமையாக வெளியேற்ற இயலாமல் போகலாம். இதனால், சிறுநீர் கசிவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
சிறுநீர்ப்பை தசைகள் பலவீனம் அடைந்தால் சிரிக்கும்போது, இருமும்போது அல்லது தூக்கத்தில் கூட சிறுநீர் கசிவு ஏற்படலாம். இது பெண்களில் அதிகமாக காணப்படும் ஒரு பிரச்சினையாகும். சில சமயங்களில் சிறுநீரை அதிகமாக அடக்குவதால், சிறுநீரில் உள்ள தாதுக்கள் படிகமாக மாறி சிறுநீர் கற்களை உருவாக்கும். இது கடுமையான வலியை ஏற்படுத்தும்.
சில ஆய்வுகளில், நீண்ட காலமாக சிறுநீரை அடக்கிக்கொள்வது சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே, சிறுநீரை அடக்குவது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியப் பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்போதெல்லாம் அதை அடக்காமல் உடனடியாக கழிப்பறை சென்று சிறுநீரை வெளியேற்றுவது நல்லது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.