Pulmonary Function Testing (PFT) என்பது நுரையீரல் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கும், சுவாசக் கோளாறுகளை கண்டறிவதற்கும் செய்யப்படும் சோதனையாகும். இந்த சோதனையில் நுரையீரல் திறன், காற்றோட்டம் மற்றும் வாயு பரிமாற்றம் பற்றிய தகவல்கள் தெரிய வரும். மேலும் இது பல்வேறு சுவாச நிலைமைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, சுகாதார நிபுணர்களுக்கு உதவுகிறது. இந்த பதிவில் PFT குறித்த சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.
PFT என்றால் என்ன?
நுரையீரல் செயல்பாடு சோதனை என்பது நுரையீரல் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைத் தொடர்ச்சியாக சோதித்துப் பார்க்கும் ஒரு வழிமுறையாகும். இதற்காக நடத்தப்படும் சோதனைகளில் பொதுவாக நுரையீரல் அளவு மற்றும் காற்றோட்ட விகிதங்களை அளவிடும், ஸ்பைரோமீட்டர் போன்ற சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இத்தகைய சோதனைகள் சுவாச பாதிப்புகளைக் கண்டறிய நுரையீரல் நிபுணர்களால் நடத்தப்படுகின்றன.
PFT இன் நோக்கம்: நுரையீரல் செயல்பாட்டை மதிப்பிட்டு ஏதேனும் அசாதாரணங்கள் அல்லது குறைபாடுகள் இருந்தால், அவற்றைக் கண்டறிவது PFT-ன் முதன்மை நோக்கமாகும். இது ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய், மற்றும் சுவாசக் கோளாறுகளைக் கண்டறிந்து கண்காணிக்க உதவுகிறது. நுரையீரல் சிகிச்சைக்கு நோயாளியின் நிலையை கண்டறியவும், ஒருவேளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றால் நுரையீரலின் செயல்பாட்டைத் தீர்மானிக்கவும் PET பயன்படுத்தலாம்.
இந்த சோதனை முறைகளில், ஒருவர் எவ்வளவு நேரம் தனது மூச்சை அடக்குகிறார், எவ்வளவு வேகமாக மூச்சை வெளியேற்றுகிறார், எவ்வளவு மூச்சுக்காற்றை வெளியேற்றுகிறார், நுரையீரலின் அதிகபட்ச காற்று உள்ளிழுக்கும் திறன், ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் பரவல் போன்ற அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.
PFT முடிவுகள்: இந்த டெஸ்டிங் முறையில் பெறப்படும் முடிவுகள் பொதுவாக வயது, உயரம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்டு, பல்வேறு விதமான மதிப்புகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இதன் மூலமாக நுரையீரல் செயல்பாட்டில் உள்ள பாதிப்புகளைக் கண்டறியலாம். நுரையீரலில் குறைந்த காற்றோட்டம் அல்லது குறுகிய நுரையீரல் அளவு போன்ற போன்ற அசாதாரண விஷயங்களை சுகாதார நிபுணர்கள் தெரிந்து கொள்ள, இந்த வழிமுறை பெரிதளவில் உதவுகிறது.
உங்களுக்கு ஏதேனும் சுவாசப் பிரச்சனைக்கான அறிகுறிகள் இருந்தால் அல்லது நுரையீரல் நோய் பற்றிய பயம் இருந்தால், ஒரு சுகாதார நிபுணரை அணுகி PFT பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதளவில் உதவும்.