
பூசணிக்காயில் வெண்பூசணி, மஞ்சள் பூசணி என இரு வகை உண்டு. இவை இரண்டுமே நமக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. வெண்பூசணியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கண் பார்வையை கூர்மையாக்கும். உடற்பயிற்சி செய்த பின்னர் சாப்பிடும் உணவில் பூசணிக்காயை சேர்த்துக்கொள்ள எலக்ட்ரோ லைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளி பிரச்னைக்கு பூசணிக்காய் நல்ல நிவாரணமாக விளங்குகிறது.
வெண்பூசணியின் சாறு 30 மி.லி.யுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட, இதய பலவீனம் நீங்கும். இரத்தம் சுத்தியாகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு பிரச்னை நீங்கவும், நீர் கடுப்பு மற்றும் நீர்ச்சுருக்கு போன்ற பிரச்னைகள் சீராகவும் வெண்பூசணி சாறு உதவுகிறது.
நுரையீரல் நோய், நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் போன்றவை குணமாக வெண்பூசணி உபயோகமாக உள்ளது. குடல் புழுக்களை நீக்கவும் பூசணிக்காய் உதவுகிறது. சூலை நோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் பூசணிக்காய் பெரும் பங்காற்றுகிறது. சரும நோய்களை குணப்படுத்தி, சருமத்திற்கு பளபளப்பைத் தருவது என வெண்பூசணி பல நல்ல பலன்களைத் தருகிறது.
உடல் சூடு, சிறுநீர் தொற்றுக்கள், எரிச்சல் மற்றும் உஷ்ண சம்பந்தமான நோய்களை பூசணிக்காய் குணப்படுத்தும். சிறுநீரக சம்பந்தமான நோய்களுக்கு பூசணிச்சாறு 120 மி.லி.யுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த நோய் முற்றிலும் குணமாவது கண்கூடு.