மழைக்காலம் வந்துவிட்டது: ஏடிஸ் கொசுக்களிடம் ஜாக்கிரதை!

மழைக்காலம் வந்துவிட்டது: ஏடிஸ் கொசுக்களிடம் ஜாக்கிரதை!
Published on

ழைக்காலம் வந்துவிட்டாலே பலருக்கும் உடல் பிரச்னைகளும் கூடவே வந்து விடும். அதேபோல், நோய் தொற்றுகளுக்கும் குறைவிருக்காது. குறிப்பாக, சிக்குன் குனியா, டெங்கு போன்ற ஜுரங்கள் மழை நீரில் உருவாகும் கொசுக்களாலேயே அதிவேகமாகப் பரவுகின்றன. இந்த வகை நோய்த் தொற்றுகள் ஏடிஸ் என்ற கொசுக்கள் மூலமாகத்தான் பரவுகின்றன.

அதிலும் இந்த வகை கொசுக்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் மிகச் சுலபமாக பலருக்கும் பரவி விடுகிறது. இத்தகைய வைரஸில் DEN1, DEN2, DEN3, DEN4 என மொத்தம் நான்கு வகை வீரியம் கொண்ட வைரஸ்கள் உள்ளன. இதனால் கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் திடீர் பருவநிலை மாற்றம் காரணமாக இத்தகைய நோய்த் தொற்றுகள் பரவுவதாக மருத்துவ வல்லுநர்களால் கூறப்படுகிறது. இவை தவிர, புதிதாக பரவும் பல வைரஸ்களாலும் டெங்கு தொற்று தீவிரமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக, இரவு நேரத்தில்தான் கொசுக்கள் அதிகம் கடிக்கும் என நினைப்பது தவறு. நோய்த் தொற்றுக்களைப் பரப்பும் இந்த வகை ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரத்திலும் நம்மை அதிகம் கடிக்கிறது. இருப்பினும் இரவு நேரத்தில் கொசுக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதால், அச்சமயத்தில் அவற்றினால் டெங்குவின் பாதிப்பை தீவிரமாக ஏற்படுத்த முடியும்.

மேலும், ஒரு நபரை கொசு எந்த இடத்தில் கடிக்கிறது என்பதுகூட டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடையதாகும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களுக்கு டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் பெரும்பாலும் கால் முட்டி மற்றும் கைமுட்டி பகுதியில்தான் அதிகம் கடிப்பதாக தெரியவந்துள்ளது. இத்தகைய கொசுக்கள் லேசாகக் கடித்தாலும் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தக் கொசுக்கள் கடித்த நான்கு முதல் பத்து நாட்களுக்குள் டெங்கு தொற்று உடலில் பரவி அறிகுறிகளை உண்டாக்கும். இந்த அறிகுறிகள் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஒவ்வொரு நபருக்கும் டெங்கு தொற்று நோயால் ஏற்படும் அறிகுறிகள் மாறுபடும்’ என மருத்துவர்கள் கூறுகின்றனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட நபரின் வயது, அவருக்கு ஏற்கெனவே உடலில் இருக்கும் பாதிப்புகளின் அடிப்படையில் அறிகுறிகள் மாறுபடும்.

டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாக எலும்பு வலி, காய்ச்சல், உடல் அசதி, தசை வலி, வாந்தி, மயக்கம், கண் சிவந்து போதல் உள்ளிட்டவை ஏற்படும். எனவே, இத்தகைய கொடூர கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருந்து உடல் நலத்தைப் பேண வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com