
வரும் மழைக்காலங்களில் தொற்று ஏற்படும் நேரங்களில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் எப்படி தீர்க்கலாம் என்பதை பார்ப்போம்.
நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகு பொடியும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் அருந்தினால் சாதாரண ஜலதோஷத்துக்கும் காய்ச்சலுக்கும் தொண்டைக்கும் உடனடி தீர்வு கிடைக்கும்.
வசம்பை வறுத்து பொடித்து அந்த பொடியில் சிறிது எடுத்து கால் டீஸ்பூன் தேனை குழைத்து சாப்பிட்டால் சளி தொல்லை தீரும் . வாயுக் கோளாறை சரிசெய்து பசியை தூண்டும் மருந்தாகவும் சரி செய்கிறது.
15 துளசி இலைகளை ஒரு டம்ளர்தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரில் சிறிது தேன் சேர்த்து சூடாக குடித்தால் ஜலதோஷ நேரத்தில் தொண்டை இதமாகும்.
துளசி இலைகள், மிளகு, சுக்கு மூன்றையும் சம அளவு தண்ணீரில் போட்டு காய்ச்சி கசாயம் ஆக்கி மிதமான சூட்டில் கசாயத்தை குடித்தால் தொண்டை வலி, மார்புச்சளி, ஜலதோஷம் ஆகியவற்றில் இருந்து துரித நிவாரணம் கிடைக்கும்.
மாதுளை மொக்கை வெயிலில் காய வைத்து பொடியாக்கி, அதைத் தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
மஞ்சள் தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வாய் கொப்பளித்தால் தொண்டைப் புண் குணமாகும்.
பூண்டை நெருப்பில் சுட்டு, அதை இளம் சூட்டில் மை போல் அரைத்துத் தொண்டையில் தடவினால் தொண்டை வீக்கம் குறையும்.
ஒரு சிட்டிகை வறுத்து பொடித்த திப்பிலித்தூள் எடுத்து நெய்யில் குழைத்து சாப்பிட ஆஸ்த்துமா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறல் குறைந்து சுவாசம் இயல்பாகும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, இருமலுக்கு துளசிச் சாறுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும்.
நான்கு ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அதில் ஏற்படும் நறுமணத்துடன் கூடிய புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு சரியாகும்.
அரைத்து நன்கு விழுதான பூண்டு ஒரு டீஸ்பூன் எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட மூக்கடைப்பு விலகி சிரமமின்றி மூச்சு விடவும் முடியும்.
வறுத்த மணத் தக்காளி வற்றலை பொடித்து, அதில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து சிறிது நாவில் தடவி உட்கொண்டால் இருமல் , ஜலதோஷமும் தீரும்.