
கோடை வெயில் தொடங்கியாச்சு... நல்லா குளிர்ச்சியா ஏதாவது சாப்பிடலாம் என்று ஆசைபடுபவர்களுக்கு தான் இந்த சளி பிடித்து கொடுமையாக இருக்கும். இது போதாதென்று வறட்டு இருமலும் உடன் சேர்ந்து மிகவும் தொந்தரவாக இருக்கும்.
விற்பனை பிரதிநிதிகள் போன்ற வேலையில் உள்ளவர்கள், வெயிலோ, மழையோ தினமும் அதிகம் அலைய வேண்டியிருப்பதால், உடலிலிருந்து அதிகமாக வியர்வை வெளியேற வாய்ப்பு உண்டு. இதேபோல் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் வெயில் காலங்களில் வழக்கத்தைவிட அதிக வியர்வை ஏற்படும். அதிக வியர்வை காரணமாக உடலிலுள்ள நீர்ச்சத்து குறைந்துவிடும். வியர்வை உடலிலிருந்து அதிகமாக வெளியேறும்போது, அதனால் கூட சிலருக்கு சளி பிடிக்கும். பின்னந்தலையில் அதிக வியர்வை சேர்ந்து சளி பிடிக்க வாய்ப்புள்ளது.
மேலும் சிலருக்கு அதிக வெப்பத்தால், நாக்கு வறண்டு போகும். தொண்டை வறண்டு போகும். உதடு காய்ந்து போகும். உடல் சோர்வாகி விடும். இதனால் சிலர் உடனே குளிர்ந்த நீரை பருகுவார்கள். இதனால் கூட வைரஸ் கிருமி உடலுக்குள் புகுந்து, ஜலதோஷம், தும்மல், இருமல் கடைசியில் சளியை உண்டாக்கிவிடுகிறது.
இப்படி இருக்கையில் சளி மற்றும் அதனால் வரும் வறட்டு இருமலை போக்க இந்த லட்டுவை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - முக்கால் கப்
நெய் - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
சுக்கு பொடி - தேவையான அளவு
சோம்பு - தேவையான அளவு
ஆம்சூர் பொடி - தேவையான அளவு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
செய்முறை:
முதலில் இஞ்சியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அதை ஒரு வானலியில் நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ளவும். அது அல்வா பதத்திற்கு மாறிய பிறகு, வெல்லத்தை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். 5 நிமிடம் விடாமல் கிளறிய பிறகு அதில், சுக்கு, மிளகு, மஞ்சள், ஆம்சூர், சோம்பு ஆகிய பொடிகளை சேர்த்து கிளறினால் போதும் பேஸ்ட் ரெடியாகிவிடும். இதை சூடாக இருக்கும் போதே லட்டு வடிவத்தில் பிடித்து வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.
தண்ணீர் படாமல் பார்த்து கொண்டால் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். உங்க வீட்டு குட்டீஸ்களுக்கு அடிக்கடி சளி தொல்லை இருந்தால் கூட இதை சாப்பிட சொல்லலாம்.