
மழைக் காலத்தின்போது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலானவர்களின் சருமத்தில் வறட்சிக்கு ஏற்படுகிறது. குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறைகளில் குறைந்த வெப்பநிலையில் வேலை செய்பவர்களுக்கும் உறங்குபவர்களுக்கும் கூட சரும வறட்சி ஏற்படும். பொதுவாக, சருமம் தனது ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறனை இழந்து விடும்போது சருமத்தை அரிக்கும் அழற்சியாகவும் இது மாறுகிறது.
இதன் விளைவாக, சருமத்தில் எரிச்சல், சருமம் சிவந்து போதல் மற்றும் சருமத்தின் மேல் கொப்புளங்கள் தோன்றுதல் போன்றவை ஏற்படும். இதனால் சருமத்தில் அரிப்பு ஏற்படும்போது பலரும் அதை சொரிந்து மேலும் அதைப் புண்ணாக்கிக் கொள்வர். லேசாக சருமம் வறண்ட நிலையில் இருக்கும்போதே தேங்காய் எண்ணெய் அல்லது மாய்சரைஸர் போன்றவை தடவினாலே போதும், சரும வறட்சி சுலபமாக சரியாகிவிடும்.
சரும வறட்சி ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்:
* நீண்ட நேரம் தண்ணீரில் வேலை செய்து விட்டு, ஈரம் அப்படியே காயட்டும் என்று விட்டுவிடாமல், ஈரத்தை மென்மையான துண்டால் துடைத்து எடுக்க வேண்டும்.
* வறண்ட சருமம் உள்ளவர்கள் குளிக்கும்போது முழங்கை மற்றும் முழங்காலுக்கு கீழ் சோப்பு போடக் கூடாது. அதேபோல், இவர்கள் கடலை மாவு தேய்த்துக் குளிக்கக் கூடாது.
* ஏ.சியில் பணிபுரிபவர் அல்லது உறங்குபவர் என்றால் அவர்கள் எப்போதும் 25 - 27 டிகிரியில் மட்டுமே வைத்து அதைப் பயன்படுத்தவும்.
* குளிக்கும் முன்பும், அதிகாலையில் நடைப்பயிற்சிக்குக் கிளம்பும் முன்பும் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்வது நல்லது.
* குளிக்கும்போது நார் மற்றும் ஓடு கொண்டு சருமத்தைத் தேய்க்கக் கூடாது.
* பாத்திரம் தேய்க்கும்போது மென்மையான பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும்.