

மழைக்காலம் (Rainy season) வந்துவிட்டாலே கூடவே வந்துவிடும் சுவாச பிரச்சனைகளும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிரினால் அல்லது மழையில் நனைந்தால் சளி பிடிப்பதும், இருமல் காய்ச்சல் போன்றவை தாக்குவதும் இயல்பானது.
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், இவை குறைந்தபட்சம் மூன்று நாட்கள் மட்டும் இருந்து விட்டு சென்றுவிடும். தொடர்ந்து குறையாமல் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் நிச்சயம் மருத்துவரிடம் சென்று ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அலட்சியமாக இருந்து சாதாரண சளியை நெஞ்சு சளியாக மாற்றிக் கொண்டு நீண்ட நாட்கள் அவஸ்தைப் படுவதை விட்டுவிட்டு சாதாரண நிலையில் சளி அல்லது தொண்டை வலி இருமல் போன்றவைகள் இருக்கும்போதே நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கை வைத்தியம் செய்து நிவாரணம் பெறலாம்.
எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் அந்த நேரத்தில் நாம் எதை செய்வது என்ற குழப்பம் பெரும்பாலும் இருக்கும். இதோ மழைக்காலத்தில் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கான வீட்டில் செய்யும் சில பாதுகாப்பான பின்விளைவுகளற்ற கை வைத்தியங்கள் உங்களுக்காக.
வீட்டில் எளிதாக செய்யக்கூடிய பயனுள்ள கைவைத்தியங்கள்
1. சூடான நீராவி (Steam Inhalation) பிடிப்பது: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து நீராவியை 5–10 நிமிடங்கள் உள்ளிழுக்கவும். மூக்கடைப்பு, சளி தளர்த்துவதற்கு இது மிகவும் உதவும். இதில் அவரவர் விருப்பம் போல் 1–2 துளி யூகலிப்டஸ் ஆயில், மஞ்சள், விக்ஸ் சேர்த்தால் கூடுதல் நன்மை. குழந்தைகளுக்கு இது பாதுகாப்பானது அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
2. சளி கரைய இயற்கை நமக்களித்த அற்புத மருந்துகள் துளசி, இஞ்சி, மிளகு ஆகியவை. இவற்றை வைத்து செய்யும் கஷாயம் சளியை கரைக்க உதவும். துளசி இலைகள் சிறிது , தோல் சீவிய இஞ்சி 1 அங்குலம், மிளகு 6 எடுத்து ஒரு கப் தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து மூடி போட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டி குடிக்கவும். இதில் கருப்பு வெற்றிலை, கற்பூரவல்லி தழைகளும் சேர்க்கலாம்.
3. தொண்டை வலி, இருமல், காய்ச்சலுக்கு நிவாரணம் தருவது சூடான தண்ணீர் குடித்தல். நாள் முழுவதும் வெந்நீர் பருகுவது சளி வெளியேற உதவுவதுடன் தொண்டையில் ஈரப்பதம் பேணி மூச்சு விட எளிதாகும்.
4. குத்திக் குத்தி வரும் இருமலுக்கு தேன் + அத்தி , இஞ்சி சாறு சரியான தேர்வு. 1 டீஸ்பூன் தேனில் ½ டீஸ்பூன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் இருமல் நிற்கும்.
5. சாதாரண இருமலை குறைக்க இயற்கையான நிவாரணமாக அனைவரும் பின்பற்றும் எளிய வழி மஞ்சள் கலந்த பால் தான். இதில் சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்தால் நலம். வெந்நீரிலும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். அழற்சியை குறைத்து சுவாசத்திற்கு ஓரளவு உதவும்.
6. பொதுவாக தொண்டைப் புண்களுக்கு உப்பு நீர் கொப்புளித்தல் (Gargle) நன்மை தரும். வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி வைத்து உமிழலாம். இதனால் தொண்டை வலி, தொண்டை வீக்கம் குறையும்.
7. மார்பு, முதுகு, கால்களில் வெந்நீர் பேக் பயன்படுத்தி சூடுப்படுத்துதல் (Hot compress). சுவாசம் மட்டுப்பட உதவும். சூடான ஆவி கொண்டு உடல் முழுவதும் வெப்பத்தை உயர்த்தும் செயல் இது.
8. Natural Balm எனப்படும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரம் (Camphor) கலந்து வெதுவெதுப்பாக நாசி, மார்பு மற்றும் முதுகில் தடவுவது குளிர்ச்சியால் ஏற்படும் மூச்சு சிரமத்தை குறைக்கும் வழியாக உள்ளது.
9. இவைகளுக்கு அவசியமின்றி சுவசத்தை சீராக்கி எதிர்ப்பு சக்தி பெற சில மூச்சு பயிற்சிகளை செய்யலாம். இதனால் நுரையீரல் பலம் பெறும்.
10. மழையில் நனைந்தால் உடனே ஆடை மாற்றுதல், அறை வெப்பநிலையை சூடாக வைத்தல், புகை, துர்நாற்றம், குளிர்ந்த பானங்கள் தவிர்த்தல், நிறைய தண்ணீர் குடித்தல் போன்றவைகள் வரும் முன் காக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும்.
11. வீட்டுவைத்தியம் லேசான அறிகுறிகளுக்கு மட்டுமே. கடும் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம், அதிக காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)