பெண்கள் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றும் ரோஜா குல்கந்து!

பெண்கள் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றும் ரோஜா குல்கந்து!
Published on

ரோஜா மலரை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அதன் ஈர்க்கும் வண்ணம் அழகு என்றால், அதன் மணமோ வேறு ரகம்! பொதுவாகவே, மலர்களுக்கு மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு தரும் குணங்கள் அதிகம். மருத்துவத்திலும் மலர் மருத்துவம் எனும் தனிப்பிரிவு உண்டு என்பதை அனைவரும் அறிவோம். ஒவ்வொரு மலருக்கும் தனிப்பட்ட மணமும் குணமும் உண்டு. பன்னீர் ரோஜாக்களை தேனில் ஊறவைத்து செய்யப்படும் குல்கந்து பற்றி இந்தப் பதிவில் அறிவோம்.

குல்கந்து தயாரிப்பு: பன்னீர் ரோஜாவுடன் தேன் சேர்த்து டபுள் பாய்லர் முறையில் மூன்று மணி நேரம் வரை நன்றாக ப்ராசஸ் செய்து தயாரிக்கப்படும் குல்கந்தே சிறந்தது. சிலர் விலை மலிவாகத் தர வேண்டும் எனும் நோக்கத்துடன் கல்கண்டுகளைச் சேர்த்து செய்தும் விற்பனை செய்வர். இதில் ரோஜாவின் துவர்ப்பு சுவை மிகுந்து, அதன் சுவை மாறுபடும்.

யாரெல்லாம் குல்கந்து சாப்பிடலாம்? வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ ஆலோசனையின்படி பெரியவர்கள் 2 டீஸ்பூன் அளவும், சிறியவர்கள் 1 டீஸ்பூன் அளவும் எடுத்துக் கொள்ளலாம் என்பது கணக்கு. தினமும் காலை வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடலாம். வளரும் பிள்ளைகளுக்கு பாலை நன்றாக ஆற வைத்து குல்கந்து கலந்து மில்க் ஷேக் போன்று கொடுக்கலாம். வெற்றிலையின் உள்ளே வைத்தும் பீடாவில் சேர்த்தும் சாப்பிடலாம்.

குல்கந்தின் பயன்கள்: குல்கந்து துவர்ப்பு சுவை கொண்டுள்ளதால் ரத்த குழாய்களுக்கும் இதயத்துக்கும் கல்லீரலுக்கும் நன்மை செய்யும். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன், மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. ரோஜா குல்கந்துக்கு வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலங்களை சம நிலையில் வைத்துக்கொள்ளும் சக்தி அதிகம் இருப்பதால், இது பசியை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணமாக இது திகழ்கிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிப் பெண்களும் ரோஜா குல்கந்தை மருத்துவரிடம் கேட்டு சாப்பிடலாம்.

உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போதும், காரமான உணவுகளை அதிகம் உண்பதாலும் வாய்ப்புண்கள் ஏற்படலாம். இதற்கு மருந்தாக ரோஜா குல்கந்து சிறந்த நிவாரணமாக இருக்கிறது. உடலில் பித்தம் அதிகமாகும்போது தலைசுற்றல், வாந்தி, குமட்டல் உணர்வு போன்றவை உண்டாகக் கூடும். அந்த நேரத்தில் குளிர்ந்த தண்ணீரில் குல்கந்தைக் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் பித்தம் குறைய வாய்ப்புண்டு.

இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கலந்து சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வரும். ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் அழகு கூடும். ஆம், இது சருமத்தில் சுருக்கங்களை அண்ட விடாமல் சரும பளபளப்பை அதிகரிக்கும். உஷ்ணத்தை குறைப்பதால் முகப்பருக்கள் நீங்குகிறது.

தினசரி எடுத்துக்கொள்ளும் 1 டீஸ்பூன் குல்கந்தின் பயனாக பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளின் தசைகளை தளர்த்த உதவும். மேலும், மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகளையும் இது குறையச் செய்கிறது. பெண்களின் அதிகப்படியான வெள்ளைப்போக்குக்கும் சிகிச்சையாக இது திகழ்கிறது. முக்கியமாக, தேனும் ரோஜாவும் சேர்ந்த குல்கந்து உடலுக்கு பாதிப்பில்லாதது. பக்கவிளைவுகளைத் தராதது. என்றாலும், எதையும் அளவுடன் எடுத்துக்கொள்வதே உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை கவனத்தில் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com