பலருக்கும் பிடித்தமான காளானை கர்ப்ப காலத்தில் சாப்பிட்டால் எவ்வளவு நல்லது, எந்த மாதிரியெல்லாம் சாப்பிடக்கூடாது போன்றவற்றைப் பார்ப்போம்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் எந்த மாதிரியான காய்கறிகள், பழங்கள், பானங்கள் எடுத்துக்கொள்வது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் சில உணவுகளை எடுத்துக்கொண்டால் சில பெண்களுக்கு வாந்தி, குமட்டல், வயிறு நிறைந்த உணர்வு, நெஞ்செரிச்சல் போன்ற பல அசௌகரியங்கள் ஏற்படும்.
கர்ப்ப காலத்தில் தன்னுடைய நலனையும் வயிற்றில் இருக்கும் சிசுவின் நலனையும் ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டும். எந்த உணவுகளை எடுத்துக்கொள்வது என்ற குழப்பப் பட்டியலில் காளானும் ஒன்று. அந்தவகையில் கர்ப்ப காலத்தில் காளான் எடுத்துக்கொள்ளலாமா என்று பார்ப்போம்.
குறைந்த அளவு கலோரிகள் கொண்ட மஷ்ரூமில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள் நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது அந்த பெண் மற்றும் குழந்தைக்கும் பல நன்மைகளைத் தருகிறது. இதில் வைட்டமின் டி அதிகம் உள்ளதால், எலும்பு சத்து அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி பல நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. அதேபோல் மஷ்ரூமில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபினை உருவாக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்குக் கூடுதல் ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது. இதில் உள்ள துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் செலினியம் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
தாராளமாக கர்ப்ப காலத்தில் பெண்கள் மஷ்ரூம் சாப்பிடலாம். ஆனால் பாராசோல் மஷ்ரூம் மற்றும் போலி மோரல்ஸ் மஷ்ரூம்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. மற்ற வகையான மஷ்ரூம்களை சாப்பிடலாம்.
அந்த நேரத்தில் மஷ்ரூம் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால், பாதுகாப்பாக சாப்பிட வேண்டியது அவசியம். குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். அதிகமாக சாப்பிட வேண்டாம். அதேபோல் சில பெண்களுக்கு ஒத்துக்கொள்ளாமல் கூட போகலாம். ஆகையால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து சாப்பிடுங்கள். மிகவும் ஃப்ரெஷாக வாங்கி சாப்பிடுங்கள். பூச்சிகள், கரைகள் இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு சமையுங்கள். அதேபோல் பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். நன்றாக கழுவி சமைத்து சாப்பிடுங்கள். முதல்முறை சாப்பிட்டுவிட்டு எதாவது அசௌகரியமாக இருந்தால், அடுத்து சாப்பிட வேண்டாம்.