நீரிழிவு நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டுமா?

நீரிழிவு நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டுமா?
Bernard Chantal

நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்ட பலருக்கும் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் போட வேண்டி இருக்குமோ என்ற பயம் இருக்கிறது. ‘எனக்கு நீண்ட காலமாக நீரிழிவு பிரச்னை இருக்கிறது. மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் பலனில்லை. எங்களின் மருத்துவர் என்னிடம் இன்சுலின் போட்டுக்கொள்ளச் சொல்லுகிறார். இன்சுலின் ஊசி போடத் தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் அதைத் தொடர வேண்டுமா?’ என்று கேட்கிறார் ஒருவர்.

இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதன் அடிப்படை காரணத்தைத் புரிந்துகொண்டால் இந்த பயம் ஏற்படாது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போதுதான் இன்சுலின் போட்டுக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சிலருக்குக் காய்ச்சல் ஏற்படும்போதும், தொற்று ஏற்படும்போதும், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். சிலருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய நேரும்போது மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக சர்க்கரை அளவை குறைக்க இன்சுலின் போடலாம்.

சிலருக்கு எந்த மாத்திரையினாலும் சர்க்கரையின் அளவு கட்டுப்படாது. அவர்களுக்கு வேறு வழியின்றி இன்சுலின் போட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இன்சுலின் சுரப்பது 90 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்துவிட்ட நிலையில்தான் இன்சுலின் ஊசி போடச் சொல்வார்கள்.

ஒருவருக்கு கை, கால்களில் புண் ஏற்பட்டதால் இன்சுலின் போடச் சொல்லியிருந்தால், புண் சரியான பிறகு இன்சுலினை நிறுத்தி விடலாம். உணவுப் பழக்கவழக்கத்தாலோ, திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணத்தினாலோ, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலோ இரத்தச் சக்கரையின் அளவு மிகவும் அதிகரித்து இருந்தால் அதைக் குறைப்பதற்கு இன்சுலின் போட்டுக் கொள்ளலாம். ஆனால், சர்க்கரை அளவு குறைந்ததும் இன்சுலின் போடுவதை நிறுத்திவிடுமாறு மருத்துவர்கள் கூறுவார்கள்.

மாரடைப்பு அல்லது பக்கவாத சிகிச்சையில் இருந்தால் மருத்துவமனையில் அட்மிட் செய்யும்போது இன்சுலின் போடச் சொல்வார்கள். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது அதை நிறுத்தி விடுவார்கள். உங்கள் உடலில் இன்சுலின் சுரப்பு மிகவும் குறைந்துவிட்ட நிலையில் வேறு எந்த மருந்து மாத்திரைகளும் வேலை செய்யாத பட்சத்தில்தான் இன்சுலினை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது  ஒருவகையில் பாதுகாப்பு சிகிச்சையும்கூட. அதை ஊசி வடிவில் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். எந்த பிரச்னைக்காக இன்சுலின் போட்டுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அதை எத்தனை நாட்கள் தொடர வேண்டும் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். எனவே, அனாவசிய பயம் வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com