சரியான உடல் செயல்பாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பு அவசியம் என்றாலும், நம்மில் பெரும்பாலானவர்கள் நமக்கு உண்மையிலேயே தேவையான அளவைவிட அதிக சோடியத்தை உட்கொள்கிறோம். இந்த அதிகப்படியான உப்பு உடலில் பல்வேறு விதமான மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். உங்கள் உடலில் அதிகமாக உப்பு இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம்.
உடலில் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று வீக்கம். குறிப்பாக கைகள், கால்கள் மற்றும் முகத்தில் அதிக வீக்கம் தென்படும். அதிக உப்பு தண்ணீரை பிடித்துக் கொள்ளும் என்பதால், உடலில் அதிகமாக நீர் சேர்ந்துவிடும். அதிகமான சோடியத்தை வெளியேற்ற உங்கள் சிறுநீரகங்கள் அதிக வேலை செய்வதால், நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையையும் சந்திக்கலாம்.
சில சமயங்களில் அதிக சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை உடலில் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதன் அறிகுறிகளாக இருக்கலாம். உங்கள் உடலில் சோடியம் அதிகமாக இருந்தால் அது நீரிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் சோம்பல் மற்றும் பதட்டம் ஏற்பட்டு தலைவலியை ஏற்படுத்தும்.
சிலர் அதிக உப்பு உட்கொள்ளும்போது மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஏனெனில் எலக்ட்ரோலைட்டுக்களில் உள்ள ஏற்றத்தாழ்வு, குடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். காலப்போக்கில் இதனால் இதய நோய் அல்லது பக்கவாதம் போன்ற கடுமையான நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால், உங்கள் உடலில் அதிக உப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சோடியம் அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்கவும். அதற்கு பதிலாக ஆரோக்கியமான பழங்கள் காய்கறிகள் புரத உணவுகள் போன்றவற்றை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். முடிந்தவரை ஹோட்டல் உணவுகளை தவிர்க்கவும். அதே நேரம் வீட்டில் சமைக்கும்போது அதில் எவ்வளவு உப்பு சேர்க்கிறீர்கள் என்பதையும் கவனிக்கவும்.
உப்பு குறைவாக சாப்பிட்டாலே, பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது.