நாம் சாப்பிடும் உணவுகளிலுள்ள சர்க்கரையை கட்டுப்படுத்துதல் மற்றும் கொழுப்பு, புரதங்களை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தும் என்சைம்களை உற்பத்தி செய்தல் என இரண்டு வேலைகளை இன்சுலின் செய்கிறது. இதை செய்வது உடலிலுள்ள கணையம் எனும் உறுப்பு. இது பழுதுபட்டால் ஏகப்பட்ட சிக்கல்கள் எழும். அதில் குறிப்பிடத்தக்கது சர்க்கரை நோய். ஆனால், சில காய்கறிகளை நாம் அன்றாடம் சாப்பிட இன்சுலினை இயற்கையாய் சுரக்கச் செய்யும் பீட்டா செல்களை புதுப்பிக்க முடியும் என்கிறார்கள். அதுபோன்ற இயற்கை உணவுகள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
முட்டைக்கோஸ்: குறிப்பாக, சிவப்பு முட்டைக் கோஸில் உள்ள பீட்டா லைன் இயற்கையாக இன்சுலினை சுரக்கச் செய்து, இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது.
வெண்டைக்காய்: இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் இதன் விதைகளிலுள்ள ஆல்பா -குளுக்கோசிடஸ் எனும் பொருளும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். மாவுச் சத்துக்களிலிருந்து சர்க்கரை உருவாகி இரத்தத்தில் கலப்பதை தடுக்கும் ஆற்றல் உடையது. இன்சுலினையும் இது சுரக்கச் செய்யும்.
பாகற்காய்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதில் உள்ள கிளைகோசைட் இரத்த சர்க்கரை அளவை கணிசமாகக் குறைப்பதுடன், நீரிழிவு நோய் வராமலும் தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். பாகற்காய் சாறுடன் நெல்லி சாறு கலந்து சாப்பிட விரைவில் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு குறையும்.
வெந்தயம்: இதன் விதைகளில் இன்சுலினை சுரக்கச் செய்யும் ‘டிரைகோனிலைன்’ எனும் பொருள் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் சிறந்த நன்மையை அளிக்கின்றது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் அளவை மேம்படுத்தவும் செய்கின்றது. இரவு ஊற வைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் 15 கிராம் வெந்தயப் பொடி சுடுநீரில் எடுத்துக் கொள்வதால், உணவிற்கு பின்பு ஏற்படும் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைக் குறைக்கின்றது.
மஞ்சள்: இது நேரடியாக கணையத்தில் உள்ள பீட்டா செல்களுடன் செயல்பட்டு இன்சுலினை நார்மலாக சுரக்கச் செய்யும். இதற்குக் காரணம் மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ எனும் பொருள். மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
லவங்கப்பட்டை: கணையம் இயற்கையாக இன்சுலினை சுரக்கச் செய்யும் ஆற்றல் உடையது பட்டை. இதன் தூளை நேரடியாக டீயில் அல்லது உணவுகளில் தெளித்து சாப்பிட இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
இன்சுலின் செடி: இயற்கையாக இன்சுலினை சுரக்க உதவும் செடி. இதன் இலைகள் இரண்டை காலையில் மென்று சாப்பிட, சர்க்கரை அளவு குறையும். மற்றபடி ஆளி விதை, திராட்சை போன்றவையும் பீட்டா செல்களை ரிப்பேர் செய்யும்.
நாவல் பழம்: பிளாக் பிளம், ஜாவா பிளம், ஜாவா ஃப்ரூட் என பல பெயர்களில் குறிப்பிடப்படும் நாவல் பழங்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நாவல் பழக் கொட்டைகளை நன்கு உலர்த்தி பின் அரைத்து எடுத்து அதன் பொடியை வெந்நீரில் சாப்பிடலாம். ஆனால், மருத்துவரிடமும் கலந்து ஆலோசித்துக் கொள்ளவும்.
நெல்லி: வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய், இன்சுலினை மேம்படுத்தி இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கின்றது. குறிப்பாக, காலை நேரங்களில் இதனை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.