டஸ்ட் அலர்ஜியை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்!

Simple Home Remedies for Dust Allergy
Simple Home Remedies for Dust Allergy

தூசியால் உண்டாகும் ஒவ்வாமை, ஒவ்வாமையின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். இது 10 சதவிகித மக்கள்தொகையை பாதிக்கிறது. பருவகால மாற்றங்கள், வீட்டிலும், வெளியில் வளிமண்டல மாறுபாடு காரணமாக காற்றில் உண்டாகும் தூசி, சாலையில் பயணிக்கும்போது வாகனப்போக்குவரத்தால் ஏற்படும் தூசி மற்றும் பூச்சிகளால் ஏற்படக்கூடியவை. கரப்பான் பூச்சியின் கழிவுகள் சிலருக்கு டஸ்ட் அலர்ஜியை உண்டாக்கும். செல்லப்பிராணிகளின் முடி, ஃபர் மற்றும் இறகுகள், மலம், உமிழ்நீர் ஆகியவை ஒவ்வாமை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள்.

தூசி ஒவ்வாமையின் அறிகுறிகள்: மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் மூக்கடைப்பு, இருமல் மற்றும் மூச்சுத்திணறல், சரும அரிப்பு போன்றவை.

தூசி ஒவ்வாமைக்கான வீட்டு வைத்தியம்:

ஆப்பிள் சாறு வினிகர்: இதில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் ஒவ்வாமையை எதிர்த்துப் போராடுகிறது.  சளியை குணமாக்குகிறது. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். உணவுக்கு 20 நிமிடங்களுக்கு முன் வெறும் வயிற்றில் குடிக்கவும். சர்க்கரை அல்லாத நோயாளிகள் 1 டீஸ்பூன் இயற்கையான தேனைச் சேர்த்து குடிக்கலாம்.

மஞ்சள்:  இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இயற்கையான ஒவ்வாமை எதிர்ப்பாற்றலை உடலுக்குத் தருகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது. இதை சமையலில் சேர்த்துக் கொள்வதுடன் டஸ்ட் அலர்ஜி உள்ளவர்கள் தினமும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குடிக்கவும். இது நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

புதினா தேநீர்: இது அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. மூச்சுத்திணறல் மற்றும் தும்மலுக்கு இயற்கையான சிகிச்சையான மெந்தோல் இதில் உள்ளது. ஒரு டீஸ்பூன் உலர்ந்த மிளகுக்கீரை இலைகளை ஒரு கப் வெந்நீரில் தேனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: மகரந்தம் என்பது தூசியில் காணப்படும் பொதுவான ஒவ்வாமை. அதற்கு எதிராக உடலை வலுப்படுத்த தேன் உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை உட்கொள்ளலாம்.

யூகலிப்டஸ் எண்ணெய்: யூகலிப்டஸ் ஒரு சளி நீக்கியாக வேலை செய்கிறது. இது வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது. இது நுரையீரல் மற்றும் சைனஸைத் திறக்க உதவுகின்றன. இதன் விளைவாக இரத்த ஓட்டம் மேம்படும். யூகலிப்டஸ் எண்ணெய் ஒவ்வாமை அறிகுறிகளையும் குறைக்கிறது. யூகலிப்டஸ் எண்ணெயில் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூக்கு மற்றும் தொண்டையில் தடவவும். இந்தக் கலவையை வெந்நீரில் கரைத்து, ஆவி பிடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வைட்டமின் சி உள்ள பழங்கள் அல்லது காய்கறிகள்: வைட்டமின் சி உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாசி, பப்பாளி, கிவி போன்ற பழங்கள், முட்டைக்கோஸ், பிரக்கோலி, பசலைக்கீரை போன்ற காய்கறிகளில் உள்ள சத்துக்கள் டஸ்ட் அலர்ஜியை வெகுவாகக்  குறைக்க உதவுகிறது.

நெய்: பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ள நெய், ஆரோக்கியத்திற்கு நல்லது. நெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தும்மலைக் கட்டுப்படுத்தவும், நாசிப் பாதையில் உள்ள வைரஸ்களை அழிக்கவும் உதவும். தினமும் அரை ஸ்பூன் நெய் உட்கொள்ளலாம். ஒவ்வாமை அறிகுறிகளில் இருந்து உடனடி நிவாரணம் பெற நாசியில் சில துளிகள் நெய்யை வைத்தும் முயற்சி செய்யலாம்.

ஆவி பிடித்தல்: தூசி ஒவ்வாமைக்கு ஆவி பிடித்தல் ஒரு சிறந்த தீர்வாகும். நாசிப் பாதை, நுரையீரல் மற்றும் தொண்டையில் இருக்கும் சளியை தளர்த்துகிறது. இது தொண்டை வலியை போக்க உதவுகிறது.. நீராவி  துளைகளைத் திறந்து, அழுக்கு மற்றும் பிற அசுத்தங்களை அகற்ற உதவுகிறது, தெளிவான சருமத்தையும் பளபளப்பாக மாற்றுகிறது.

துளசி: இது சுவாச அமைப்பு மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. துளசியில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு, தொண்டையில் இருந்து சளியை அகற்ற உதவுகிறது.

டஸ்ட் அலர்ஜி வராமல் தடுக்க செய்ய வேண்டியவை:

1. ஹால் மற்றும் படுக்கையறையில் உள்ள ஸ்க்ரீன்களில் ஏராளமான அழுக்கும் தூசியும் ஒட்டியிருக்கும். அவற்றை  நான்கு நாட்களுக்கு ஒரு முறை அகற்றி, சுத்தமாக துவைத்து உலரவைத்து எடுக்கவும். அதேபோல தரைவிரிப்புகளில் உள்ள தூசியை வாக்குவம் கிளீனர் கொண்டு சுத்தம் செய்யவும். சோபாக்களில் உள்ள தூசியையும் முறையாக அகற்றவும்.

2. செல்லப்பிராணிகளை படுக்கையறைக்கு வெளியே வைக்கவும், முடிந்தால், வீட்டிற்கு வெளியே வைக்கவும். அதன் முடி மூக்கில் சென்றால் டஸ்ட் அலர்ஜியை ஏற்படுத்தும்.

3. வீட்டிற்குள் ஈரப்பதம் இல்லாத சூழலை பராமரிக்கவும்.

4. படுக்கைகள் மற்றும் தலையணைகளை மைட்-ப்ரூஃப் லினன்களால் மூடி வைக்கவும்.

5. ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் அதிக திறன் கொண்ட வடிப்பானைப் பயன்படுத்தவும்.

இதையும் படியுங்கள்:
கருப்பு நிற கேரட்டில் உள்ள ஆரோக்கிய குணம் தெரியுமா?
Simple Home Remedies for Dust Allergy

6. சமையல் அறை, குளியல் அறைகளில் கரப்பான் பூச்சிகள் இருந்தால் அவற்றை வெளியேற்றவும். பூச்சிக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை செய்யவும்.

7. மூடுபனி மற்றும் குளிர் காலத்தில் காலையில் வெளியில் செல்ல வேண்டும் என்றால் தலையை குல்லா, தொப்பியால் மூடிக்கொள்ள வேண்டும்.

8. குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், பொரித்த உணவுகள் மற்றும் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.

9. பருவகால மற்றும் உள்நாட்டில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com