நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. தோலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களின் காரணமாக வியர்வை துர்நாற்றம் ஏற்படுகிறது.
சிலருக்கு அக்குள் பகுதியில் அதிகமான வியர்வை உண்டாகும். அதிக வியர்வையால் சிலசமயம் நாற்றமும் உண்டாவதால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி வரும்.
இதற்கான காரணங்கள்:
உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது.
இறுக்கமான உள்ளாடைகள் அணிவது.
நாள்பட்ட நோய்கள்.
அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது.
அதிக ரசாயனம் கலந்த கிரீம்களை உபயோகிப்பது.
அதிக காற்றோட்டம் இல்லாத இடங்களில் வசிப்பது போன்றவை வியர்வையில் துர்நாற்றம் ஏற்பட காரணங்களாகும்.
அதற்கான தீர்வுகள்:
அக்குளில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குதல் அதிகப்படியான வியர்வையும் நாற்றத்தையும் குறைக்கும்.
குளிக்கும் நீரில் 4 துளிகள் யூகலிப்டஸ் ஆயில் கலந்து குளிக்க வியர்வை நாற்றம் போய் புத்துணர்ச்சியாக இருக்கும்.
குளித்து முடித்ததும் ஈரத்துடன் உடைகளை அணியாமல் துண்டால் நன்கு ஈரம் போக துடைத்து ஆடை அணியலாம்.
குளிக்கும் நீரில் சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குளிக்க துர்நாற்றம் வீசாது.
வியர்வை அதிகமாக வருபவர்கள் உணவு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் நாற்றம் அடிக்காமல் இருக்கும்.
பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை தவிர்க்கலாம். காஃபின் அதிகம் உட்கொள்வதையும் தவிர்க்க வியர்வை நாற்றம் அதிகம் வராது.
அதிக கொழுப்புள்ள உணவுகள், ஐஸ்கிரீம், காரசாரமான உணவுகள் ஆகியவற்றையும் தவிர்க்கலாம். இவற்றிற்கு பதில் கால்சியம் சத்து நிறைந்த பால், சீஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
அதிக அளவு நீர் பருகலாம். நீர் காய்களான தர்பூஸ், திராட்சைப்பழம், முலாம்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
பச்சை காய்கறிகள், கீரை வகைகள், ப்ராகோலி, காலிபிளவர் போன்றவையும் வியர்வை சுரப்பை கட்டுப்படுத்தும். எனவே இவற்றை தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
வீட்டிலேயே தயாரிக்கலாம் குளியல் பொடி:
கஸ்தூரி மஞ்சள், ஆவாரம் பூ, சந்தனத்தூள், காய்ந்த பன்னீர் ரோஜா இதழ்கள், பச்சைப்பயிறு, வெந்தயம், காய்ந்த எலுமிச்சை ஓடுகள் அத்துடன் சிறிதளவு கார்போக அரிசி கலந்து மிஷினில் அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும் சமயம் அந்தப் பொடியை தேய்த்து குளிக்க பயன்படுத்தலாம்.
இதற்குப் பிறகும் துர்நாற்றம் ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.