

சருமத்தில் ஏற்படும் வெக்கை, சிறு கொப்பளங்கள் மற்றும் சீழ் பிடித்த பருக்கள் (Impetigo/Furuncles) ஆகியவை இன்று பலருக்கும் பொதுவான(skin problem) பிரச்னையாக உள்ளது. குறிப்பாக அதிக வியர்வை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும்போது இத்தகைய பாதிப்புகள் தீவிரமடைகின்றன. முறையான விழிப்புணர்வு இல்லாவிட்டால், எளிதில் குணமாக வேண்டிய இந்த காயங்கள் பெரிய புண்ணாக மாறிவிடக்கூடும். இந்த கட்டுரையில் இத்தகைய சருமப் பிரச்னைகளைக் கையாள வேண்டிய முறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
செய்யக் கூடாதவை: தவறான கைவைத்தியத்தைத் தவிர்க்கவும். சருமத்தில் புண் வந்தவுடன் பலரும் செய்யும் முதல் தவறு, கண்ணில் கண்ட கிரீம்களைத் தடவுவதுதான். பல் துலக்கும் பேஸ்ட் உட்பட மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய களிம்புகளை மருத்துவர் ஆலோசனை இன்றிப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், இயற்கை வைத்தியம் என்ற பெயரில் சந்தனம், நாமக்கட்டி, குப்பைமேனி இலை, சுண்ணாம்பு + நாட்டுச்சர்க்கரை + மஞ்சள் போன்றவற்றை புண்ணின் மீது பூசுவது தொற்றை அதிகப்படுத்தும்.
குறிப்பாக, மசாலாப் பொருட்களைத் தோலில் தடவுவது புண்ணைப் பெரிதாக்கி, எரிச்சலை உண்டாக்கும். புண் இருக்கும் இடங்களில் வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மாய்ஸ்சரைசிங் கிரீம்களைத் தடவுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை சருமத் துளைகளை அடைத்து கிருமி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
சுகாதார நடைமுறைகள் மற்றும் தூங்கும் முறை
சருமத் தொற்று இருப்பவர்கள் தங்களின் தனிப்பட்ட சுகாதாரத்தில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தலையணை மற்றும் கைகுட்டை: தலையணை உறையை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றவும். ஒரு நாள் தலை வைத்துப் படுத்த பின்பு மறுநாள் அதை திருப்பிப் போட்டுப் பயன்படுத்தவும். அல்லது ஒரு சுத்தமான கைகுட்டையைத் தலையணையின் மீது விரித்துப் படுத்து, அதைத் தினமும் துவைத்துவிட வேண்டும்.
தூங்கும் நிலை: முகத்தை மூடிக்கொண்டோ அல்லது தலையணையில் முகம் அழுந்தும்படியோ தூங்க வேண்டாம். இது காற்றோட்டத்தைத் தடுத்துப் புண் ஆறத் தாமதமாகும். தலையில் கர்ச்சீப் கட்டுவதையும் தவிர்க்கவும்.
குளிக்கும் முறை: குளிக்கும்போது நார் (Scrubber) பயன்படுத்தக் கூடாது. நகத்தால் புண்ணைச் சுரண்டுவதோ அல்லது அழுத்தித் தேய்த்துக் குளிப்பதோ கூடாது. இது தொற்று மற்ற இடங்களுக்கும் பரவ வழிவகுக்கும்.
உணவு முறையும் சர்க்கரை கட்டுப்பாடும் உடலில் ஏற்படும் புண்கள் ஆற்றுவதற்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மிக முக்கிய காரணியாகும். ரத்தத்தில் சர்க்கரை அளவை 120 mg/dL-க்கு கீழே வைத்திருப்பது அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதற்குரிய முறையான சிகிச்சையை மேற்கொண்டால் மட்டுமே இத்தகைய சருமப் புண்கள் விரைவாகக் குணமாகும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: கேக், பேரிச்சம்பழம், பிஸ்கட், இனிப்பு வகைகள், இனிப்பான பழங்கள், ஐஸ்கிரீம், புரோட்டா மற்றும் பாட்டில் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். அதிக இனிப்பு மற்றும் மைதா உணவுகள் உடலில் வீக்கத்தை அதிகரித்துப் புண் ஆறுவதைத் தடுக்கும்.
பரவுதலைத் தடுத்தல்: இம்பெடிகோ போன்ற தொற்றுகள் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே, அடிக்கடி மூக்கைத் நோண்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை மூக்கைத் தொட்டாலோ அல்லது புண்ணைத் தொட்டாலோ உடனடியாக சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும். இது ஒரு சாதாரண சருமத் தொற்றுதான், 'அம்மை' கிடையாது என்பதால் வீண் பயம் கொள்ளத் தேவையில்லை. சரியான சுகாதார நடைமுறைகள், உணவுக்கட்டுப்பாடு மற்றும் தேவையற்ற களிம்புகளைத் தவிர்ப்பதன் மூலம் இத்தகைய சருமப் பிரச்னை களிலிருந்து நாம் எளிதில் மீள முடியும்.