உங்கள் குழந்தை வேகத்தடையின்றி விறு விறுவென்று வளர வேண்டுமா? அப்படியென்றால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். குழந்தைகளுக்கு விருப்பு வெறுப்பு என்ற பாகுபாடின்றி புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் ஆகிய அனைத்தும் அடங்கிய சரிவிகித உணவை தினசரி உட்கொள்ளப் பழக்குங்கள். பின் அதுவே ரொட்டீனாகி விடும். கீழே குறிப்பிட்டுள்ள ஆறு வகை உணவுகளில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதைப் பார்ப்போம்.
* புரதச் சத்து நிறைந்துள்ள லீன் மீட் (Lean meat), சிக்கன், மீன், முட்டை, பால், பயறு வகைகள், தாவரக் கொட்டைகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வர, அவர்களின் தசை மற்றும் திசுக்கள் நன்கு வளர்ச்சி அடையும்.
* சீஸ், யோகர்ட், வெண்ணெய் போன்ற பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. இது அவர்களின் எலும்புகள் மற்றும் பற்களை வேகமாகவும் வலுவாகவும் வளர உதவி புரிகின்றன.
* பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை உடலின் மொத்த வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன.
* முழு தானியங்களால் தயாரிக்கப்பட்ட பிரட், பாஸ்தா, ரைஸ், செரியல் போன்றவை வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களையும் சக்தியையும் தந்து உதவுகின்றன.
* அவகோடா, நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவற்றில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் ஆரோக்கியத்திற்கும் ஒட்டு மொத்த உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் நிற்பவை.
* பீன்ஸ், பசலைக் கீரை, சிக்கன், ரெட் மீட் (Red meat), செரிவூட்டப்பட்ட செரியல்கள் ஆகிய உணவுகளில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்தத்தின் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் உடல் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.
மேற்கூறிய உணவு வகைகளை குழந்தைகளுக்கு அளிப்பதோடு, அவர்களை உடற்பயிற்சி செய்யவும் பெற்றோர் ஊக்குவித்தால் பலன் இரு மடங்காகும்.