சருமப் புற்றுநோய் (Skin Cancer) என்பது சருமத்தில் வழக்கத்திற்கு அதிகமாக செல்களின் எண்ணிக்கை பெருகுவதாகும். இவை உடம்பில் சூரிய ஒளி படும் பகுதிகளான தலை, முகம், காது, கழுத்து, உதடு, கை, கால் போன்றவற்றில் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய ஒரு நோய் ஆகும். இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் இந்நோயை குணப்படுத்துவது சுலபம். சூரியனின், தீங்கிழைக்கக்கூடிய அல்ட்ரா வயலட் கதிர்கள் உடம்பில் அதிகம் படுவதே இதற்கான காரணங்களில் ஒன்று எனலாம். இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உடம்பில் திடீரென தோன்றும் புள்ளி அல்லது ஏற்கெனவே இருந்த புள்ளியின் நிறம், அளவு மற்றும் வடிவில் உண்டாகும் மாற்றம் கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம். இது காயங்களுக்கு போடும் மருந்துகளால் கூட குணமாகாமல் அல்சர் போல் அப்படியே இருக்கும். அதில் இரத்தம் வரவும் செய்யும் அல்லது வராமலும் இருக்கும். அவ்வாறான நிலையில் மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் அவசியம்.
முகம், கை போன்ற சூரிய கதிர்கள் படும் இடங்களில் சிவப்பு அல்லது கருமை நிற திட்டுக்கள் தோன்றுவதும், பாலுண்ணி, மருக்கள் போன்றவை தோன்றி வளர்வதும் மற்ற அறிகுறிகளாகும். பருக்களுக்கு தரும் மருந்துகளால் இவை குணமடையாது.
வெயில் நேரங்களில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வெளியில் செல்வதைக் குறைத்தல், முழுக்கை சட்டை, பாண்ட் மற்றும் அங்கங்கள் எதுவும் வெளியே தெரியாத படி ஆடை அணிதல், சன்ஸ்கிரீன் உபயோகித்தல், அகலமான ஓரம் கொண்ட தொப்பி அணிதல் போன்ற தற்காப்பு முறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.
நம் கண்களைச் சுற்றியுள்ள பகுதி அல்ட்ரா வயலட் கதிர்களால் சுலபமாக பாதிப்படையக் கூடியவை. எனவே UVA மற்றும் UVB கதிர்களை முழுவதுமாக தடுக்கக்கூடிய பெரிய சைஸ் சன் கிளாஸ் அணிவது ஆரோக்கியமானது. வெயிலின் தாக்கம் அதிகம் உடலில் படாமல் பார்த்துக் கொண்டால் இந்நோயிலிருந்து தப்பிக்கலாம்.