அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை புகையிலை பயன்பாடு புழக்கத்தில் இருந்து வருகிறது. அன்றைய சுருட்டு சிகரெட்டாக உருமாறி காலத்திற்கேற்ப இ-சிகரெட்டாக தற்போது பயன்பாட்டில் உள்ளது. இத்துடன் பல்வேறு வகைகளில் புகையிலையை உள்ளடக்கிய போதை பொருள்களும் இருக்கிறது. இதனால் மக்கள் சந்திக்கும் கேடுகளை அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி கட்டுப்பாடு விதித்தாலும் இன்னும் இதைப்பற்றிய விழிப்புணர்வு பெருகவில்லை என்பதுதான் உண்மை.
தற்போது உலகளவில் 10 பெரியவர்களில் ஒருவரைக் கொல்வதற்கு புகையிலை பயன்பாடு காரணமாகிறதாகவும் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்களை புகையிலை கொல்கிறது என்றும் குறிப்புகள் கூறுகின்றன. மேலும் உலகளவில் 13-15 வயதுக்குட்பட்ட 37 மில்லியன் குழந்தைகள் புகையிலையைப் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது கவலை தரும் விஷயமாக உள்ளது.
புகையிலை வளர்ப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தேவையற்ற அழுத்தத்தை தருகிறது. சாகுபடி, உற்பத்தி, விநியோகம், நுகர்வு மற்றும் நுகர்வோருக்குப் பிந்தைய கழிவுகள் மூலம் மனித ஆரோக்கியத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கிறது.
சிகரெட் தரும் தீங்குகள்
மனித உடலில் ஏற்படும் விளைவுகள்
நுரையீரல், வாய், தொண்டை மற்றும் பிற வகையான புற்றுநோய்கள் இறப்புகளுக்கு புகையிலை முக்கிய காரணமாகும். புகைபிடித்தல் இருதய அமைப்பை சேதப்படுத்துகிறது, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), எம்பிஸிமா மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக புகைபிடித்தல் தோல், முடி மற்றும் பிற உறுப்புகளை பாதித்து முதுமைத் தோற்றம் தரும்.
சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள்
புகையிலை புகை மற்றும் சிகரெட் துண்டுகள் காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன, மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. உபயோகித்து வீசும் சிகரெட் துண்டுகள் மற்றும் புகையிலை கழிவுகள் நீர்வழிகளை மாசுபடுத்தி, நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் விவசாயம் மண் சரிவு மற்றும் மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான துண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டு கழிவு மேலாண்மையில் சிகரெட் துண்டுகள் குப்பை மற்றும் கழிவுகளின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருக்கிறது.
இதையும் கவனிக்கவும்
சிகரெட் புகைப்பவர்கள் மட்டுமல்ல அருகில் இருந்து அந்தப் புகையை சுவாசிப்பவர்களுக்கும் பெரும் உடல் நலக்கேடுகளை அவர்களே அறியாத வண்ணம் ஏற்படுத்தும் சைலண்ட் கில்லராக உள்ளது. காரணம் சிகரெட் புகையில் உள்ள உடல் நலம் பாதிக்கும் மாசுக்கள் நிறைந்துள்ளது.
சிகரெட் புகையில் ஹீமோகுளோபினுடன் இணைந்து உடலுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதை தடுக்கும் வாயுவான கார்பன் மோனாக்சைடு, அடிமையாக்கும் தன்மையை ஏற்படுத்தும் நிக்கோடின், இரத்த புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு வழிவகுக்கும் புற்றுநோய் காரணியாக அறியப்படும் பென்சின் ஆகியவற்றுடன் ஃபார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு, அம்மோனியா போன்ற பல நச்சு ரசாயனங்களும் உள்ளதால் இதை சுவாசித்தாலும் அதை பயன்படுத்தினாலும் அத்தனை தீமைகளும் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இத்தனை தீமைகள் தரும் சிகரெட்டை விட்டுவிடுவது சவாலானது என்பது அதை பயன்படுத்துபவர்களின் கருத்து. ஆனால் ஆலோசனை, மருந்துகள் மற்றும் குடும்ப ஆதரவு உள்ளிட்டவைகளால் நிச்சயமாக இந்தப் பழக்கத்தை கைவிட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக சிகரெட் பிடிப்பதை பொது இடங்களில் மற்றும் வீடுகளில் தவிர்க்க வேண்டியது கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)