குறட்டை விடுவது சாதாரண விஷயமல்ல! இதோ... ஆபத்தை தடுக்கும் அருமையான பாட்டி வைத்தியம்!

Snoring
Snoring
Published on

இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்க நினைக்கும்போது, அருகில் இருப்பவர் விடும் குறட்டைச் சத்தம் பெரும் எரிச்சலை ஏற்படுத்தும். பல வீடுகளில் இதை ஒரு சாதாரண விஷயமாகக் கடந்து சென்று விடுகிறார்கள். ஆனால், தொடர்ந்து இப்படிச் சத்தம் எழுப்புவது உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பெரிய பாதிப்பின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் என்பதைப் பலரும் உணர்வதில்லை.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருமே இந்தத் தொல்லைக்கு ஆளாகிறார்கள். இந்தப் பதிவில், எந்தப் பக்கவிளைவும் இல்லாமல் நமது சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே இந்தத் தொல்லையிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

குறட்டை அறிவியல்!

நாம் தூங்கும்போது தொண்டையிலிருந்து ஏன் சத்தம் வருகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்வது அவசியம். நாம் மிகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமது தொண்டைப் பகுதியில் உள்ள தசைகள் இயற்கையாகவே தளர்ந்து விடுகின்றன. இதனால் நாம் சுவாசிக்கும் பாதை மிகவும் குறுகலாகி விடுகிறது. அந்தச் சிறிய வழியில் மூச்சுக்காற்று சிரமப்பட்டு உள்ளே சென்று வெளியேறும்போது ஏற்படும் அதிர்வுதான் குறட்டைச் சத்தமாக மாறுகிறது.

சில நேரங்களில் இந்த மூச்சுப்பாதை முழுமையாக அடைபட்டு, சில விநாடிகள் மூச்சு விடுவதே நின்றுவிடும் அபாயமும் உள்ளது. இதைத் தான் மருத்துவ உலகில் 'தூக்க மூச்சுத்திணறல்' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தால் பகல் நேரத்தில் அதிக சோர்வு, இதய நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதைத் தவிர்க்க சில எளிய வழிகள் உள்ளன.

1. கடுகு எண்ணெய்!

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பிரச்னை இருந்தால், இரவில் தூங்கச் செல்வதற்கு முன் இந்த எளிய மசாஜை செய்து பார்க்கலாம். சிறிதளவு கடுகு எண்ணெயை எடுத்து லேசாகச் சூடேற்றிக் கொள்ளவும். பின்னர் அந்த வெதுவெதுப்பான எண்ணெயை மூக்கின் வெளிப்பகுதியில் இரண்டு நிமிடங்களும், கழுத்து மற்றும் தாடையின் அடிப்பகுதியில் சுமார் ஐந்து நிமிடங்களும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் தொண்டை அடைப்புகள் நீங்கி, சுவாசப் பாதை விரிவடைந்து குறட்டை வருவது கணிசமாகக் குறையும்.

2. மஞ்சள் மற்றும் கல் உப்பு!

தொண்டையில் உள்ள தேவையற்ற வீக்கத்தைக் குறைப்பதற்குத் தொண்டை கொப்பளிப்பது ஒரு மிகச்சிறந்த வழியாகும். வெதுவெதுப்பான ஒரு டம்ளர் தண்ணீரில், சிறிதளவு கல் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும். தூங்கப் போகும் முன் இந்த நீரை வாயில் ஊற்றி நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். இது தொண்டையின் உட்புற வீக்கத்தை வற்றச் செய்து, சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கும்.

3. தேன், மிளகுத்தூள்!

சளியினால் ஏற்படும் அடைப்புகளை நீக்க இந்த முறை பெரிதும் கைக்கொடுக்கும். ஒரு ஸ்பூன் சுத்தமான தேனில், ஒரு சிட்டிகை அளவு கருப்பு மிளகுத் தூளைச் சேர்த்துக் குழைத்து, தூங்குவதற்கு முன்பு அப்படியே சாப்பிட வேண்டும். இது தொண்டையில் கட்டியிருக்கும் சளியை இளக்கி, மூச்சு விடுவதை மிக எளிதாக்குகிறது. இதனால் தொண்டையில் எழும் அந்த உறுமல் சத்தம் படிப்படியாகக் குறைந்து நல்ல தூக்கம் வரும்.

முறையான வாழ்க்கை முறை மாற்றங்களோடு, இந்த இயற்கை வைத்தியங்களையும் பின்பற்றினால் நீங்களும் உங்கள் துணையையும் எவ்வித தொந்தரவும் இன்றி நிம்மதியாகத் தூங்கலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com