ஸ்ப்ரிங் ஆனியன் (Spring Onion) எனப்படும் வெங்காயத்தாளை, ஃபிரைட் ரைஸ், சாலட் போன்ற பல்வேறு உணவுகளில் சுவையூட்டியாகவும் மற்றும் அலங்கரிப்பதற்காகவும் பயன்படுத்தி வருகிறோம். அதற்கும் மேலாக, வெங்காயத் தாளில் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
வெங்காயத் தாளில் வைட்டமின் A, C, K ஆகியவையும், பொட்டாசியம், ஃபோலேட் போன்ற மினரல்களும் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை நம் உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியவை.
இதிலுள்ள குர்செடின் (Quercetin) போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நம் உடலுக்குள் ஃபிரிரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்த உதவுகின்றன. அதன் மூலம் உடலின் ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் வீக்கம் குறைகிறது.
வெங்காயத் தாளில் உள்ள சில வகைக் கூட்டுப் பொருள்களானவை இதய நாளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவல்லவை. அவை உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துகின்றன; அதிகப்படியான கொழுப்பின் அளவையும் குறைக்கின்றன. அதன் மூலம் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது.
வெங்காயத் தாளில் நிறைந்துள்ள அதிகளவு வைட்டமின் Cயானது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஸ்ப்ரிங் ஆனியனை அடிக்கடி உட்கொண்டால், தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட உடலுக்கு வலிமை கிடைக்கும்; உடல் சுகவீனம் அடையும்போது அதைத் தாங்கும் சக்தியும் கிடைக்கும்.
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமானம் சீராக நடைபெற உதவுகின்றன; மலச்சிக்கலைத் தடுக்கின்றன. ஜீரண மண்டல அனைத்து உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன.
வெங்காயத் தாளில் உள்ள அல்லிசின் என்ற கூட்டுப் பொருள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. அது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதால், இது நீரிழிவு நோய் உள்ளவர்களும் உண்ண ஏதுவான உணவாகிறது.
இதிலுள்ள ஃபெருலிக் (Ferulic) ஆசிட் மற்றும் குர்செடின் என்ற கூட்டுப் பொருள்களானது உடலிலுள்ள கொழுப்பு செல்களின் அளவையும் எடையையும் குறைக்கும் குணம் கொண்டவை. அதனால் மொத்த உடல் எடையிலும் கணிசமான அளவு குறைவு உண்டுபண்ண ஏதுவாகிறது.
இத்தனை நன்மைகள் கொண்ட ஸ்ப்ரிங் ஆனியனை அனைவரும் உண்போம்; ஆரோக்கியம் பெறுவோம்.