இரத்த சோகை என்பது இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்கள், அதாவது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதைக் குறிக்கும். ஃபோலேட் (வைட்டமின் பி9), வைட்டமின் பி12, வைட்டமின் ஏ குறைபாடு இருந்தாலும் இரத்த சோகை உண்டாகலாம் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
உலகம் முழுவதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவு இரத்த சோகை ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு இந்த குறைபாடு அதிகம் காணப்படுகிறது. ஒரு பெண் குழந்தைக்கு இரத்த சோகை இருப்பது குழந்தை பருவத்திலேயே சரி செய்யப்படாவிட்டால் அது பூப்படைந்த பின்னரும் தொடர வாய்ப்புண்டு. பிறகு அப்பெண் திருமணம் ஆகி கருவுற்றால் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் இரத்த சோகை இருக்கும். எனவே, சிறு வயதிலேயே இதனை சரி செய்து விடுவது நல்லது.
ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது இரத்த சோகை குறைபாடு இருந்தால் அவருக்கு குறை பிரசவம், இரத்த அழுத்தம் அதிகரித்தல், எடை குறைந்த குழந்தை பிறப்பது, மகப்பேறுக்கு பின் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போதல் போன்ற பாதிப்புகள் உண்டாக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரத்த சோகை அறிகுறிகள்: இரத்த சோகை இருந்தால் உடல் சோர்வு, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை உண்டாகும். உலகம் முழுவதும் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக அளவில் இரத்த சோகை உள்ளது. இரும்பு சத்து பற்றாக்குறையால்தான் இது உண்டாகிறது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களின் நகங்கள், சருமம் ஆகியவை வெளுத்து காணப்படும். அத்துடன் சோர்வு, பி.பி குறைவு, தலைவலி ஆகியவையும் ஏற்படும்.
இரத்த சோகையை தடுக்க: இரும்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்வதுடன் இரும்புச்சத்தை உறிஞ்சும் எலுமிச்சை, நெல்லி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும்.
இரத்த சோகைக்கான வீட்டு வைத்தியங்கள்:
1. முருங்கை இலைகள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாறு பிழிந்து அத்துடன் தேன் கலந்து காலை உணவுடன் இதை உட்கொள்ள முருங்கையில் உள்ள வைட்டமின் ஏ, சி, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை இரத்த சோகையை குணப்படுத்த உதவும்.
2. அரை கப் தயிர் எடுத்து அத்துடன் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள், அரை ஸ்பூன் சீரக பொடி சேர்த்து கலந்து குடிக்க இரத்த சோகை குணமாகும்.
3. இரண்டு அத்திப்பழங்களை எடுத்து ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலை அதனை நான்காக நறுக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
4. வாழைப்பழம் ஒன்றை தேனில் முக்கி சாப்பிடலாம்.
5. இரண்டு பேரீச்சம் பழங்களுடன் 10 காய்ந்த திராட்சையை ஒரு கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விட்டு அந்த நீரை வடிகட்டி குடிக்கவும். பிறகு திராட்சையும் பேரீச்சம் பழத்தையும் மென்று சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
6. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காய்ந்த கருப்பு திராட்சையை வாங்கி தினம் ஐந்து எடுத்து அரைக்கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் திராட்சையை மென்று தின்று அந்த நீரை பருக நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.