தும்மல் பற்றி அறிய வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

Girl with sneezing
Girl with sneezing

தும்மல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? காற்று தவிர, வேறு எந்த வெளிப்பொருளும் மூக்கில் நுழைந்தால் அதை மூக்கு அனுமதிக்க மறுக்கிறது. அப்போது ஏற்படும் அனிச்சைச் செயல்தான் தும்மல். நாம் காற்றை உள்ளிழுக்கும்போது கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள்கள் இருந்தால் மூக்கு துவாரத்தில் உள்ள சிறிய முடி இழைகள் அவற்றை வடிகட்டி அனுப்பும். அளவுக்கு அதிகமாக தூசி அல்லது துகள் மூக்கில் நுழைந்து விட்டால் மூக்கில் உள்ள சவ்வுப்படலம் தூண்டப்பட்டு அதிக அளவில் நீரை சுரக்கிறது. இதனால் நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்றுசேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித்தள்ளுகின்றன. அப்போது தும்மல் வருகிறது. இப்படித் தும்மும்போது மூக்குக்குள் சென்ற தூசியோ, துகளோ வெளியேற்றப்படுகிறது.

தும்மலுக்கான காரணங்கள்: தும்மலுக்கான முதல் காரணம் ஒவ்வாமைதான். வீட்டில் இருக்கும் தூசு, ஒட்டடை, செல்லப் பிராணிகளின் உடலில் இருந்து வெளிப்படும் பொடுகு, செடி. கொடிகளில் இருக்கும் மகரந்தம், சிறிய பூச்சிகள், மேலும் வாசனை திரவியங்கள், ஊதுபத்தி, சாம்பிராணி புகை, வாசனை, கற்பூரம் கொசுவர்த்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை, குளிர்ந்த காற்று, பனி, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டாலும் அடுக்கு தும்மல் ஆரம்பித்து விடும். மேலும். வறண்ட காற்று, சளி காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகளாலும் தும்மல் ஏற்படும்.

தும்மும்போது ஏன் கண்களை மூடுகிறோம் தெரியுமா?

பொதுவாக. ஒருவர் தும்மும்போது அவருடைய கண்கள் தானாக மூடிக்கொள்ளும். மூக்கு மற்றும் வாய் வழியாக தூசு வெளியேற்றப்படும்போது அந்த எரிச்சலில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள கண்களை மூடிக் கொள்கிறோம்.

தும்மலை தடுக்கும் வழிகள்: அடுக்கடுக்காக தும்மும்போது அது மூக்கிற்கு மிகவும் எரிச்சலைத் தரும். தும்மலை பின்வரும் வழிகளில் தடுக்கலாம்.

1. ஒத்துக்கொள்ளாத வாசனை திரவியங்களைத் தவிர்க்கவும். அதிக வாசனை உள்ள ஊதுபத்தி புகை சாம்பிராணி புகையை தவிர்க்கவும்.

2. யாராவது சிகரெட் பிடிக்கும்போது அருகில் இருந்தால் தொலைவே சென்று விடவும்.

3. செல்லப் பிராணிகளை வீட்டிற்கு வெளியே வளர்க்க வேண்டும். அவற்றை சுத்தமாகக் குளிப்பாட்டி வைக்க வேண்டும். உடலில் இருக்கும் முடியை நன்றாக சீவி அதனுடைய ரோமம் வீட்டில் எங்கும் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம்.

4. ஏசியில் உள்ள பில்டர்களை அடிக்கடி கழுவ வேண்டும்.

5. ஒட்டடை, தூசின்றி வீட்டை வைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து தும்மல் வந்து கொண்டே இருந்தால் நுரையீரலில் உள்ள காற்றை ஆழமாக வெளியேற்றலாம். தும்மலின்போது ஏற்படும் அழுத்தம் குறையும். நன்றாக மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் மூச்சை உள்ளே அடக்கி பின்பு மெதுவாக சிறிது சிறிதாக வெளியே விட வேண்டும்.

6. ஒருவர் தும்மும்போது பிறருக்கும் அது தொற்றாமல் இருக்க கைக்குட்டை அல்லது கைகளால் வாயை மறைத்துக்கொண்டு தும்முவது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com