இந்திய சமையலில் மசாலா மற்றும் வாசனைப் பொருட்கள் அவசியமான பொருட்களாகும். மசாலா மற்றும் வாசனைப் பொருட்கள் உணவு தயாரிப்பில் நறுமணத்தைக் கூட்டவும், சுவையை அதிகரிக்கவும் சேர்க்கப்படுகின்றன. இவற்றின் சத்துக்களின் மதிப்பு மிகக் குறைவு. ஒரு சில மசாலாக்கள் இரும்பு சத்து மிகுந்தது. அத்துடன் சிறிய ஆதார பொருட்களையும், பொட்டாசியம் போன்றவற்றையும் கொண்டது. மிளகாய், தனியா போன்றவற்றில் B- கரோட்டின் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. பச்சை மிளகாயில் B - கரோட்டினும், உயிர்ச்சத்து C யும் மிகுந்து உள்ளன. மசாலாக்கள் என்பன வாசனை மிகுந்த தாவரப் பொருட்கள் ஆகும். மசாலா பொருட்கள் உணவை சமைக்கவும், தாளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வாசனையுள்ள மசாலா பொருட்கள் உணவு தயாரித்த பின் மணமூட்டவும், சுவையூட்டவும் பயன்படுகின்றன.
மசாலா பொருட்கள் உணவுக்கு சுவையூட்ட மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்துக்காகவும் பெரிதுவும் உதவுகிறது. சோம்பு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஜாதிக்காய், ஏலக்காய், பெருங்காயம், தனியா, மிளகு, ஓமம் போன்ற பொருட்களின் கலவைதான் மசாலா. இவை நம் பசியை தூண்டுவதுடன் செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றன.
நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் தூண்டப்படுவதுடன், வாயுவையும் மசாலாப் பொருட்கள் போக்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை மசாலாப் பொருட்கள் உருவாக்குகின்றன. மேலும், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை எதிர்க்கும் தன்மை இவற்றுக்கு உண்டு.
உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தை மசாலாப பொருட்கள் ஏற்படுத்துகின்றன. அதோடு, உடல் எடையை குறைக்க உதவுவதுடன், ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் நம்மை வைத்திருக்க உதவுகின்றன. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
இப்படி சிறந்த மணமூட்டியாகவும், சுவையூட்டியாகவும் உள்ள இந்த மசாலா பொருட்களை எதற்கெடுத்தாலும் எந்த உணவில் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்வதும் தவறு. அளவோடு உணவில் சேர்த்தால் மசாலா பொருட்கள் உடலுக்கு நன்மை செய்யும் எனபதை மனதில் கொள்ளுங்கள்.