வயிற்றை சுத்தமாக்கும் ஜீரணப்பொடி: தயாரிக்கலாம் வாங்க!

Digestive Powder
Digestive Powder
Published on

வயிறு தொடர்பான பிரச்சினையால் இன்று பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வயிறு சுத்தமாக இல்லாதது தான். வயிற்றைச் சுத்தம் செய்ய உதவும் ஒரு ஜீரணப்பொடியை எப்படித் தயாரிக்க வேண்டும் என விளக்குகிறது இந்தப் பதிவு.

இன்றைய நவீன உலகில் உணவுகள் கூட நவீன மயமாகி விட்டது. கால மாற்றத்திற்கு ஏற்ப உணவுகளில் மாற்றம் ஏற்பட்டு பல வகையான உணவுகள் இன்று புதிதாய் முளைத்து விட்டன. இவை உண்மையில் நம் உடலுக்கு நன்மை அளிப்பவையா? இல்லவே இல்லை! வெறும் ருசிக்காக மட்டுமே இங்கு பல்வேறு உணவுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனைச் சாப்பிடுவதால் பலவித உடல் உபாதைகள் வருவதோடு, வயிறும் அசுத்தமாகிறது. நமக்கு உடலின் வெளிப்புற சுத்தம் எவ்வளவு முக்கியமோ அதைவிட வயிற்றுச் சுத்தம் முக்கியமாகும். ஆகையால் வயிற்றை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.

வயிற்றைச் சுத்தம் செய்ய பல வழிகள் இருப்பினும் ஜீரணப்பொடி இதற்கு நல்ல தீர்வாக அமைகிறது. ஏனெனில் பலருக்கும் அஜீரணக் கோளாறு தான் பெரிய தலைவலியாய் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு சரியான நேரத்தில் செரிமானம் அடைந்து விட்டாலே போதும். வயிறு எப்போதும் சுத்தமாக இருக்கும். செரிமானம் தாமதமானால் பசியின்மை ஏற்படுவதோடு, வயிறும் அசுத்தமாகி விடுகிறது. வயிற்றுச் சுத்தத்தை உறுதிப்படுத்தும் ஜீரணப்பொடியை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

தேவையான பொருள்கள்:

மிளகு - 50 கிராம்

சுக்கு - 50 கிராம்

சீரகம் - 50 கிராம்

ஓமம் - 50 கிராம்

வசம்பு -50 கிராம்

இந்துப்பு - 10 கிராம்

செய்முறை:

மிளகு, சுக்கு, சீரகம், ஓமம், வசம்பு மற்றும் இந்துப்பு ஆகிய அனைத்தையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு அனைத்துப் பொடியையும் நன்றாக கலந்து கொண்டால் ஜீரணப்பொடி தயாராகி விடும். இப்பொடியைச் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மேலும் யார் வேண்டுமானாலும் மிக எளிதாக செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
செரிமானம் தூண்டும் வெற்றிலை கூந்தலையும் பராமரிக்குமாமே! எப்படி?
Digestive Powder

உண்ணும் முறை:

ஒரு கிளாஸ் பால் அல்லது சுடுதண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஜீரணப்பொடியைக் கலந்து கொண்டு, மதிய உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட வேண்டும். இந்நேரத்தைத் தவிர்த்து மாலை 6 மணியளவிலும் ஜீரணப்பொடியை சாப்பிடலாம்.

செரிமானக் கோளாறு மற்றும் வயிறு வலி உள்ள பெரியவர்கள் ஜீரணப்பொடியை உட்கொண்டு ஒரே நாளில் சரியாகவில்லை என்றால், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். மேலும் வயிறு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ஜீரணப்பொடியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வயிறு பெருக வாழ்நாள் சுருங்கும் என்று சொல்வார்கள். ஆகையால் வயிற்றில் ஏற்படும் உபாதைகளை உடனே சரிசெய்து விடுவது தான் மிகவும் நல்லது. வயிற்றைச் சுத்தப்படுத்தும் இந்த ஜீரணப்பொடி நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com