குறைவான செலவில் உடலுக்கு உடனடி எனர்ஜியை கொடுக்கக் கூடிய பானம் என்றால், அது கரும்புச்சாறுதான். சாலையோரங்களில் விற்கப்பட்டு வந்த கரும்புச்சாறு விற்பனை தற்போது பெரிய பெரிய வணிகக் கட்டடங்கள் வரை விரிவடைந்து இருக்கிறது. கரும்புச்சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
கரும்புச்சாறு உடலுக்கு உடனடியாக எனர்ஜியை கொடுக்கக்கூடிய ஒரு சத்து மிகுந்த பானம். குடித்த சில நிமிடங்களிலே உடல் சோர்வை நீக்கி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும்.
கரும்புச்சாறில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. சுமார் 70 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதம் இதில் நீர்ச்சத்து உள்ளது. இதனால் நாவறட்சியைத் தடுத்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.
உடல் எப்போதும் சூடாக இருப்பதாக உணர்பவர்கள் கரும்புச்சாறை தாராளமாக அருந்தலாம். இது உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதில் கரும்புச்சாறுக்கு முக்கியப் பங்கு உண்டு. கரும்புச்சாறில் அதிகமாக வைட்டமின்கள், மினரல்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்கிறது.
கரும்புச்சாறு குடிப்பதனால் வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகளை சரி செய்து செரிமான உறுப்புகளை சீர்படுத்த உதவுகிறது. கரும்புச்சாறில் உள்ள பொட்டாசியம் வயிற்றில் உள்ள நோய் தொற்றுகளை தடுத்து மலச்சிக்கலை சீர் செய்கிறது. மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கு கரும்புச்சாறு ஒரு மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.
கரும்புச்சாறு அருந்தும்போது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கரும்புச்சாறினை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
கரும்புச்சாறில் குறைந்த அளவு சோடியம் உள்ளதால் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று, அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை நீக்கி சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுதல் போன்ற பிரச்னைகளை தடுக்கிறது.
கரும்புச்சாறில் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனிஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் புற்றுநோய் செல்கள் வர விடாமல் தடுப்பதில் இது முக்கியப் பங்காற்றுகிறது.
கரும்புச்சாறில் கால்சியம் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கும் இதனை தாராளமாகக் கொடுக்கலாம். குழந்தைகளின் பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துவதில் கரும்புச்சாறுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோயை தடுப்பதிலும் கரும்புச்சாறு முக்கியப் பங்காற்றுகிறது. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கரும்புச்சாறு குடிப்பதனால், அப்பிரச்னை நீங்கப்பெற்று, நல்ல சுவாசத்தை அனுபவிக்கலாம்.
முகத்தில் அதிகமான முகப்பருக்கள் உள்ளவர்கள் கரும்புச்சாறை குடிப்பதன் மூலம் முகத்தில் ஏற்படும் தேவையற்ற அலர்ஜிகளை குறைக்கலாம்.
அடிக்கடி பசியின்மை ஏற்படுவதாக உணர்பவர்கள் கரும்புச் சாறுடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து பருகும்போது நல்ல பசி உணர்வு ஏற்படும்.
எப்போதும் கரும்புச்சாறை பிழிந்த உடனே அருந்துவது மிகவும் நல்லது. நீண்ட நேரம் வைத்து அதனை அருந்தும்போது கரும்புச்சாறின் சுவை, மற்றும் அதன் தன்மை மாறக்கூடும்.
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கரும்புச்சாறு பருகுவதை உரிய மருத்துவரின் ஆலோசனைகளின்படி எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. மற்ற அனைவரும் மிக எளிதில் கிடைக்கும் பானமான கரும்புச்சாறினை தாராளமாக எடுத்துக் கொண்டு பயன் பெறலாம்.