புளிச்சக்கீரையில் உள்ள இனிப்பான நன்மைகள்!

Sweet benefits of Pulicha Keerai
Sweet benefits of Pulicha Keeraihttps://agritzfresh.com

நினைத்தாலே நாவில் நீரூற வைக்கும் புளிப்பு சுவை கொண்ட இயற்கையின் அருட்கொடையான புளிச்சக்கீரை இரத்த சோகை நோயைத் தடுப்பதுடன், உடல் நலனுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. புளிச்சக்கீரையின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இந்தப் பதிவில் காண்போம்.

புளிச்சக்கீரையை ஹிந்தியில் கொங்குரா, பிட்வா என்றும், ஆங்கிலத்தில் கெனாஃப் அல்லது ரோசெல்லே என்றும் சொல்வார்கள். புளிச்சக்கீரையில் பச்சை தண்டு வகை, சிவப்பு தண்டு வகை என இரு வகைகள் உண்டு. பெரும்பாலும் நாம் பச்சைத்தண்டு வகையையே பயன்படுத்துகிறோம். நீளமான தண்டுடன் மூன்று இதழ்களைக் கொண்டு வளரும் இதன் இலைகளை மட்டுமே நாம் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இதன் தண்டுகளை அப்படியே மண்ணில் நட்டாலும் மீண்டும் துளிர்த்து வளரும் என்பது சிறப்பு.

புளிச்சக்கீரையில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுடன் பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், ரிபோஃப்ளோவின் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் உள்ளன. இந்தக் கீரையில் கொழுப்புச் சத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இது இருதய வாஸ்குலர் பாதிப்புகளைத் தடுக்கிறது. புளிச்சக்கீரையில் அற்புதமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

இந்தக் கீரையின் இரண்டு நிற வகைகளிலும் அற்புதமான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இதை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சருமம் மற்றும் முடியின் பாதிப்புக்கு முக்கியக் காரணமான ஃப்ரீரேடிக்கல்களைத் தடுக்கிறது.

பெண்களை அதிகம் தாக்கும் ஒரு உடல் நலப் பிரச்னை இரத்த சோகை. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் இரத்த சோகையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்தக் கீரை ஒரு வரப்பிரசாதம் எனலாம். புளிச்சக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் இரத்த சோகை பிரச்னையை எளிதில் தீர்க்கலாம். அது மட்டுமின்றி, இரத்த சோகையின் விளைவுகளான முடி உதிர்தல், சோர்வு, பலவீனம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளையும் இது தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலுக்கு குளிர்ச்சியோடு புத்துணர்வு தரும் சில உணவுகள்!
Sweet benefits of Pulicha Keerai

புளிச்சக்கீரையில் குறைந்த கலோரிகள் உள்ளன. 100 கிராம் புளிச்சக்கீரையில் 24 கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி உணர்வைக் குறைத்து நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் பல செரிமானப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணமான மலச்சிக்கலைத் தடுக்க முடியும். புளிச்சக்கீரையில் உள்ள பாலிபினால்கள் உடல் பருமன் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிவாரணம் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் சாறு LDL, ட்ரைகிளிசரைடு மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. புளிச்சக்கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் சாதாரண செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றுவதற்கு முக்கியக் காரணமான ஃப்ரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இத்தனை மருத்துவ குணங்கள் இருந்தாலும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம். ஏற்கெனவே உடல் நலக் கோளாறுகள், ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இதை உணவில் சேர்த்துகொள்வது அல்லது தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com