தீபாவளியை ஸ்வீட் எடுத்துக் கொண்டாடுங்க; ஆனால் உங்க பற்களையும் பாதுகாத்துக்கோங்க!

Sweets, Cavities and Tooth Decay
Sweets, Cavities and Tooth Decay
Published on
Deepavali 2023
Deepavali 2023

‘சில மணி நேரம் மட்டுமே தீபாவளி பட்டாசு வெடிக்கணும்’ என்று அரசாங்கம் அறிவுறுத்துகிற மாதிரி, ஸ்வீட் சாப்பிடவும் சில விதி முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் பல் மருத்துவர் Dr.T.S.S குமார் M.D.S (Dental surgeon& Consultant Periodontist). அதிகமான சர்க்கரை உள்ள பலகாரங்களை உண்ணுவதால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும், அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம், சரி செய்யலாம் என்றும் அவர் சொல்வதைப் பார்க்கலாம்.

“கறை நல்லதா இருக்கலாம். ஆனால், சர்க்கரை நல்லதே இல்லை உங்கள் பற்களுக்கு. நாம் சாப்பிட ஆரம்பித்த 20 நிமிடங்களுக்குப் பிறகுதான் பற்களில் பிளேக் உருவாகத் தொடங்குகிறது. அதைத் திறம்பட அகற்றவில்லை என்றால், பல் சிதைவு தொடங்குகிறது. தொடர்ந்து சர்க்கரையை உட்கொள்பவர்களுக்கு பல் சொத்தை ஏற்படும் அபாயம் அதிகம். குறிப்பாக, இன்று கடையில் வாங்கும் பலகாரங்களில் சர்க்கரையுடன் மைதா போன்ற பொருட்களும் சேர்ந்து இருப்பதால், அந்தப் பதார்த்தங்களை உண்ட பிறகு, பற்களில் ஒட்டியுள்ள மிச்சங்கள் இயற்கையாக நம் வாயில் உள்ள பாக்டீரியாக்களுடன் சேர்ந்து அமிலத்தை சுரக்க ஆரம்பிக்கின்றன. இது பற்களின் மேல் பூச்சான எனாமலை (enamel) திறனிழக்கச் செய்து, பல் சொத்தைக்கு வழி வகுக்கின்றன. இன்று மூன்றில் ஒருவருக்கு பல் சொத்தை இருப்பதற்குக் காரணம் அதிகப்படியான சர்க்கரை உணவுகளை உட்கொள்வதுதான். குழந்தைகளையும் இது அதிகம் பாதிக்கிறது.

தற்போது நாம் உணவில் சர்க்கரையை அதிகமாக உட்கொள்கிறோம். சர்க்கரையின் மூலம் நம் தினசரி ஆற்றல் தேவைக்கான 10 சதவிகிதம் மட்டுமே உட்கொள்வதே பல் சொத்தை மற்றும் ஈறு நோய்களை தவிர்க்க ஒரே வழி என்று WHO அறிக்கை கூறுகிறது. இது ஒரு நாளைக்கு 7 டீஸ்பூன் அல்லது 30 கிராம் சர்க்கரைக்கு சமம். ஒரு மைசூர்பாக்கும் ஒரு குலாப் ஜாமூனும் உண்டாலே இந்த சர்க்கரை அளவை நாம் தாண்டி விடுகிறோம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குறைந்த பட்சம் 80 முதல் 100 கிராம் வரை சர்க்கரையை உட்கொள்கிறோம்.

பண்டிகை நாட்களில் ஸ்வீட் சாப்பிட வேண்டாம் என்று கூற முடியாது. ஆனால், கீழ்கண்ட விதிமுறைகளை கடைபிடித்தால் உங்கள் பற்களை நீங்கள் பாதுகாக்கலாம்.

1. தினமும் இருமுறை பல் துலக்குங்கள். நம்மில் பலரும் காலையில் ஒரு வேளை மட்டுமே பல் துலக்குகிறோம். இரவு தூங்குவதற்கு முன் பல் துலக்க வேண்டும் என்ற வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

2. வாயில் ஒட்டிக்கொள்ளும் இனிப்புப் பண்டங்களான கேக், சாக்லேட் போன்றவற்றை தவிர்க்கலாம். அதுபோன்ற உணவுகளைச் சாப்பிட்டால் உடனே பல் துலக்குங்கள் அல்லது வாயை நன்றாகக் கொப்பளியுங்கள்.

3. இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால் நீங்கள் உணவு உட்கொள்ளும் வேளையில் சாப்பிடுங்கள். உணவு நேர இடைவெளிகளில் ஸ்நாக்ஸ் போல இனிப்பு உட்கொள்ள வேண்டாம். அடிக்கடி உண்பதால் வாயில் அதிக அமிலம் சுரக்கிறது.

4. இனிப்புப் பானங்களை அறவே தவிர்த்து விடுங்கள். சர்க்கரையின் அளவு இவற்றில் அதிகப்படியாக இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் தரும் ‘பழ’ இனிப்புகள்!
Sweets, Cavities and Tooth Decay

5. வெல்லம், கருப்பட்டி சேர்த்த இனிப்புப் பண்டங்கள் சர்க்கரை அளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.

6. கடையில் வாங்கும் இனிப்புப் பண்டங்கள் அதிகமான சர்க்கரை மற்றும் எண்ணெய் / நெய் / வனஸ்பதி கொண்டுள்ளன. இது நம் வாயில் அதிகம் ஒட்டிக்கொள்ளும். கடையில் வாங்குவதை விட, பண்டிகை கால இனிப்புகளை வீட்டில் தயாரித்து உண்பதே சிறப்பாகும்.

7. பழங்களில் இனிப்பு இருந்தாலும் அவற்றில் உள்ள இயற்கை சர்க்கரை பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும் நேரத்தில் பழங்கள் உண்ணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com