வயோதிகத்தினால் வரும் பத்து நன்மைகள்!

வயோதிகத்தினால் வரும் பத்து நன்மைகள்!
Published on

யது என்பது ஒரு எண் மட்டுமே. வயதாகும்போது மனம் விரும்பியதை எல்லாம் உடலால் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால், அதேசமயம் வயதாவதில் சில நன்மைகளும் உள்ளன. அவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

1. பிள்ளை வளர்ப்பு, அவர்களின் கல்வி போன்ற பொறுப்புகள் முடிவடைந்துவிடுவதால், வயோதிக வாழ்க்கையை விருப்பம் போல் நன்றாக அனுபவிக்க முடியும்.

2.  மூளை மிகவும் கூர்மையாகிவிடும். பொதுவாக, வயதாகி விட்டால் எதுவும் கற்றுக்கொள்ள முடியாது என்பது உண்மையில்லை. அறுபது வயதுக்கு மேல், தமது ஓய்வுக்காலத்தில் நிறைய புதிய விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். கார் ஓட்டுவது, கை வேலைகள், பாட்டு, இசைக்கருவிகள் மீட்டுதல் போன்றவை.

3. இளையவர்களைத் தாக்கும் மன அழுத்தம், முதியவர்களுக்கு இல்லை. அவர்களின் இயல்பான பக்குவம், நிதானம், பொறுமை போன்ற குணங்களால் சவாலான விஷயங்களை அவர்கள் இளையவர்களை விட மிகத் திறமையாக கையாளுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

4. வயதாகும்போது மிகவும் ரிஸ்க்கான விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். மது அருந்துவது, புகை பிடிப்பது, காரை மிக வேகமாக ஓட்டுவது போன்ற செயல்களை அவர்கள் செய்ய மாட்டார்கள்.

5. இளையவர்களை விட, முதியவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் வசதியாகவே இருப்பார்கள். தன்னுடைய ஓய்வு காலத்தை மிகவும் ரசித்து வாழ்வார்கள்.

6. மூட்டு வலி, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் ரீதியான பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், முறையாக உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதற்கு போதுமான அளவு நேரம் கிடைக்கும்.

7. இளமையில் செய்ய நினைத்து முடியாமல் போன விஷயங்களை முதுமையில் செய்து கொள்ளலாம். பிடித்தமான பொழுதுபோக்குகள், பயணம் செல்லுதல் போன்றவற்றை எந்த இடையூறுமின்றி செய்யலாம்.

8. குறைந்த அளவே தூக்கம் வருவதால் காலையில் சீக்கிரம் எழுந்து பயனுள்ள சில விஷயங்களைச் செய்யலாம். செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, காய்கறி வாங்கி வருவது, ஏழைப் பிள்ளைகளுக்கு இலவச டியூஷன், சமூக சேவை போன்றவை.

9. பேத்தி, பேரன் போன்ற மூன்றாம் தலைமுறையிடம் இணக்கமாகப் பழகுதல் இயற்கையாகவே கைவரும். அவர்களுக்குக் கதைகள் சொல்லி மகிழ்விக்கலாம்.

10. முதுமை ஒருவரை நல்ல அனுபவசாலியாகவும் விவேகியாகவும் மாற்றியிருக்கும். அதனால், எதிர்மறை எண்ணங்களில் இருந்து மிக சுலபமாக உங்களால் விடுபட முடியும். இளையோர்களுக்கு தகுந்த ஆலோசனையும் வழங்கி, நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com